’’டிராஃபிக் ராமசாமி உயிருடன் இருக்கும்போதே அவரை கெளரவப்படுத்தியதற்கு நன்றி..!’’ - கமல்

விகடன்  விகடன்
’’டிராஃபிக் ராமசாமி உயிருடன் இருக்கும்போதே அவரை கெளரவப்படுத்தியதற்கு நன்றி..!’’  கமல்

யக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர்  நடிப்பில் விக்கி இயக்கியுள்ள திரைப்படம், 'டிராஃபிக் ராமசாமி'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள், வைரமுத்து மற்றும் எஸ் ஏ. சந்திரசேகரிடம் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் ஷங்கர், பொன்ராம், ராஜேஷ், சாமி என முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

நீதிமன்றம் போன்றே விழா மேடையை அமைத்து நிகழ்ச்சியை தொடங்கினார்கள். படக்குழுவினர்களும் வந்திருந்த விருந்தினர்களும் சாட்சிக்கூண்டில் நின்று பேசியது புதியதாகவும் படத்தின் தன்னையை விட்டு விலகாமலும் இருந்தது. முதலில் ட்ரெய்லரையும் பாடல்களையும், பின்னர் கமல்ஹாசன் பேசிய வீடியோ ஒன்றையும் ஒளிபரப்பினர். அதில்,’டிராஃபிக் ராமசாமி படத்தின் பாடல்கள், ட்ரெய்லர்களை  பார்க்கும் போதே படம் எப்படி வந்திருக்கும் என்பது தெரிகிறது. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்தின் வியாபார ரீதியாக வெற்றிப்படமாக மாற்றுவது ரசிகர்கள் கையில் இருக்கிறது. டிராஃபிக் ராமசாமியை பலரும் ஒரு கோமாளியாகத்தான் பார்க்கிறார்கள். அவரது போராட்டத்தையும் அவரது வாழ்க்கை முறையையும் படமாக எடுக்க நினைத்த இயக்குநர் விக்கிக்கு எனது பாராட்டுகள். அவர் உயிருடன் இருக்கும்போதே அவரை கெளரவப்படுத்தியதற்கு எனது நன்றி’’ என்றார்.

முதலில் மேடையேறிய எஸ்.ஏ,சி சந்திரசேகர், விழாவிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை சிறப்பித்து பேச ஆரம்பித்தார். "17 படங்கள் வேலை செய்தும்  என் கோபத்துக்கு ஒருமுறை கூட ஆளாகாத ஒருத்தர்னா அது ஷங்கர்தான். டிராஃபிக் ராமசாமியை பார்த்து,'கோபப்படுவதற்கும் போராடுவதற்கும் வயது ஒரு தடையில்லை' என்பதைக் கற்றுக் கொண்டேன். இங்கே போராடாமல் நமக்கு எதுவும் கிடைக்காது.போராட்டம் வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். நல்ல விஷயங்களுக்கு நிச்சயம் போராட வேண்டும். அப்படி ஒரு போராட்டமான திரைப்படம்தான் இது. அந்த டிராஃபிக் ராமசாமியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு அவருடைய வாழ்க்கையில் நடந்த இன்ப துன்பங்களை ரொம்ப யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம். கமல் அவர்கள் சாதாரணமாக யாரையும்  பாராட்டிவிட மாட்டார். அவர் 'இந்த படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளை செய்யுங்கள்' என்றார். இந்த ஒரு வாய்ப்பை எனக்கு தந்த ராமசாமிக்கு எனது நன்றியை சொல்லி கொள்கிறேன்" என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர் பேசும்பொழுது,"யார் விதிகளை மீறினாலும் அதை எதிர்த்து போராடுகின்ற , அதை தட்டி கேட்கின்ற டிராஃபிக் ராமசாமி நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியான மனிதர். அவரை பற்றிய செய்திகளை பத்திரிக்கைகளில் பார்க்கும்பொழுது ஆச்சரியமாக இருக்கும். அவரிடத்தில் ஒரு ஹீரோயிசம் தெரியும். மனசுக்குள் 'கிளாப்ஸ்' தட்டியிருக்கிறேன். இப்படி ஒரு முன்மாதிரியான மனிதரை வைத்து படம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. டிராஃபிக் ராமசாமி கேரக்டர் எப்படின்னா,'கத்தி எடுக்காத இந்தியன், வயசான அம்பி'. எங்க ஆபிஸுக்கு பக்கத்துலதான் இவர் குடியிருந்தார். அவரோட கதையெல்லாம் கேட்டு, அந்தக் கதையை ரஜினி சாரை வச்சு எடுக்கணும்னு யோசிச்சிருக்கேன். திடீர்ன்னு ஒருநாள் இந்தப் படத்தோட அறிவிப்பு வந்தவுடனே, 'ஆஹா, வட போச்சே’னு தோணுச்சு. ஆனால், அதை எஸ்.ஏ.சி சார் பண்றாருன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இந்த கதாபாத்திரத்திற்கு சமுதாயத்தின் மீது கோபம் இருக்கும் எஸ்.ஏ.சி சார்தான்  பொருத்தமாக இருப்பார். அந்தக் கோவம் எனக்கும் தொத்திக்கிச்சுன்னு நினைக்கிறேன். இந்தப் படத்தை பார்க்க நானும் ஆவலாக இருக்கேன்" என்றார்.

வைரமுத்து பேசும்பொழுது, "எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருக்கும் எனக்கும் மிக நெருங்கிய பழக்கமெல்லாம் இல்லை. இருந்தாலும் என்மீது அவருக்கு எப்பொழுதுமே ஒரு பிரியம் இருக்கும். அவரது மகன் விஜய்யின் திருமணத்தை நிகழ்த்தி வைக்க இரண்டு பேரை மட்டும்தான் எஸ்.ஏ.சி மேடைக்கு அழைத்தார். ஒருவர் வலம்புரி ஜான், இன்னொருவன் நான். இந்த இரண்டு பேரை மட்டும் வைத்து விஜய் திருமணத்தை நிகழ்த்தினார். அவர் மனதில் நான் இருக்கிறேன் என்று நான் உணர்ந்த அற்புதமான சந்தர்ப்பம் அது. இன்னொரு சந்தர்ப்பம் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்தது.

இந்த படத்தை இவ்வளவு பெரிய கலைப்படைப்பாக ஆற்றியிருப்பதற்கு முதல் நோக்கம் 'சமூக அக்கறை' என்று நினைக்கிறேன். டிராஃபிக் ராமசாமி என்னும் நிகழ்கால தத்துவத்தையும் போர்க்குணத்தையும் கலையாக செய்த எஸ்.ஏ.சியை நான் மிகவும் பாராட்டுகிறேன். இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் படம் புரிவது எளிது. ஆனால்,நிகழ்காலத்தின் எரியும் நிமிடங்களை படமாக்குவதுதான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய சவால். அந்தச் சவாலை எதிர்க்கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி.

'போராடுவதற்கு தேவையானது மனதுதானே தவிர வயது ஒரு பொருட்டல்ல' என்பதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி.திரைக்குப் பின்னால் இவர் அனுபவித்த துயரங்கள் மிகவும் கொடுமையானவை. ராமசாமி என்ற பெயருக்கே தமிழ்நாட்டில் பெரிய வரலாறு உண்டு. ஈரோடு ராமிசாமியின் இன்னொரு நிழலாக இந்த அக்ரஹாரத்து மனிதரை பார்க்கிறேன்" என்றார்.

டிராஃபிக் ராமசாமி பேசும் போது,"எங்கள் குடும்பத்தில் பல கஷ்டங்கள் இருந்தாலும் என் தந்தையார் மக்களின் நலனுக்காக போராடியவர். அவர் வழியில் வந்தவன் நான். என்னுடைய இந்த மேன்மைக்கு காரணம் என் மனைவி. இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்ற உந்துதலோடு இயக்குநர் விக்கி என்னிடம் கேட்டபொழுது, எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. என்னுடைய குறிக்கோளே பயமின்மை, தைரியம், தன்னம்பிக்கை. இந்த மூன்றும் இருந்தால் நீங்கள்தான் ராஜா. வயது பெருசு கிடையாது. எனக்கு வெறும் 85தான். காவல்துறையால் பாதிக்கப்பட்டு இப்பொழுதுகூட உடம்பு சரியில்லை. நிறைய பெரிய மனிதர்கள் எனக்கு போன் பண்ணி, 'ராமசாமி எப்போ உன் படம் வருது'னு கேட்கிறாங்க. இதெல்லாம் எனக்கு நோபல் பரிசுக்கு சமம்ங்க" என்றார்.

மூலக்கதை