'மொட்டை ராஜேந்திரன் ரீல்ல எப்படியோ அப்படித்தான் ரியல்லேயும்!' லாவண்யா

விகடன்  விகடன்
மொட்டை ராஜேந்திரன் ரீல்ல எப்படியோ அப்படித்தான் ரியல்லேயும்! லாவண்யா

மீடியா துறையில் வெள்ளி விழா பயணத்தில் இருப்பவர், லாவண்யா. ஒரு காலகட்டத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை எனச் சுழன்றவர், சீரியலுக்கு பிரேக் எடுத்து படங்களில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார். ஃபேவரைட் நடிகை எனப் பலரிடமிருந்து கம்மெண்ட்ஸ் வாங்கியவர். தற்போது, 'ஆறாம் திணை' படத்தில் நடித்திருக்கிறார். அவரைப் பற்றிய குட்டி பயோ...

பெயர்: லாவண்யா

ஹைலைட் படங்கள்: படையப்பா, வில்லன், தெனாலி

குடும்பம் : சிங்கிள், ஜாய்ண்ட் ஃபேமிலி

கடைசியாக நடித்த சீரியல்: ரோமாபுரி பாண்டியன்

எதிர்காலத் திட்டம்: நடிப்பு மட்டுமே.

''எங்க பூர்வீகம் ஆந்திரா. ஆனால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. எம்.இ படிச்சிருக்கேன். அம்மா, ரெண்டு அண்ணன்கள், அக்கா எனக் கூட்டுக்குடும்பமா இருக்கோம். அதுதான் என் பலமே. நான்கு வயசிலேயே மீடியாவில் என்ட்ரி கொடுத்துட்டேன். எங்க மாமா மூலமா தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமானேன். அப்போ ஆரம்பிச்சது, சீரியல் மற்றும் சினிமா என பிஸியா இருந்தேன். ஒரு சீரியலில் நடிக்கும்போது, நிறைய சினிமா வாய்ப்புகள் வரும். தேதி இல்லாததால் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடுவேன். அதனால், சீரியலுக்கு பிரேக் கொடுத்து படங்களில் நடிக்கலாம்னு தோணுச்சு. இப்போ, முழுக்க முழுக்க படங்களில் கவனம் செலுத்தறேன். எனக்கு எப்பவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறதுதான் பிடிக்கும். சீரியலிலிருந்து விலகறதுக்கு அதுவும் இன்னொரு காரணம்'' என்கிற லாவண்யா தனது சீரியல், சினிமா அனுபவங்களைப் பகிர்கிறார்.

'' 'அரசி' சீரியலில் நான் நடிச்ச கேரக்டர் மக்களிடம் நல்ல ரீச் கொடுத்துச்சு. 'படையப்பா', 'தெனாலி', 'வில்லன்' என நிறைய படங்கள் தனி அடையாளம் கொடுத்துச்சு. 'படையப்பா'வில் நாசர் சாரின் மனைவி கேரக்டர். இந்தச் சின்ன வயசிலேயே இப்படி வயதான கேரக்டரில் நடிக்கிறதா எனத் தயக்கமா இருந்துச்சு. தலைமுடியில் வெள்ளை அடிச்சுட்டு, வெளியில் வர்றதுக்கே கூச்சப்பட்டு எஸ்கேப் ஆவேன். அம்மாதான் என்கூட எல்லா ஷூட்டிங்கிலும் இருப்பாங்க. டைரக்டர் சார் சொன்னதுக்கு அப்புறமாதான் கூச்சப்படாம நடிச்சேன். அந்த சமயம் அதுதான் என் முதல் பெரிய படம். ரவிக்குமார் சார் பொறுமையா நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார். அதையெல்லாம் இப்போ நினைக்கும்போது காமெடியா இருக்கு. ஆனால், மிகப்பெரிய ஹிட் டீமில் நானும் இருந்ததை நினைச்சு ஹேப்பி, ரஜினி, கமல், விஜய், அஜித் என எல்லா பெரிய நடிகர்களின் படங்களில் நடிச்சுட்டேன். ஒவ்வொருத்தரிடமிருந்தும் பல விஷயங்களை கத்துக்கிட்டேன். முக்கியமா, இவங்க யாரிடமும் பெரிய ஆர்ட்டிஸ்ட் என்கிற பந்தாவே இருக்காது. அதுனால தான் அவங்க எல்லோருமே பெரிய ஆர்ட்டிஸ்டாக ஜொலிக்கிறாங்க என்றவரிடம் மறக்க முடியாத பாராட்டு எதுங்க எனக் கேட்டதும் புன்முறுவலோடு தொடர்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் சார் என் நடிப்பைப் பாராட்டினது லைஃப்ல மறக்கமுடியாத தருணம். இப்போ, 'ஆறாம் திணை' படத்தில் மொட்டை ராஜேந்திரன் சாருடன் நடிச்சேன். ஸ்கிரீனில் அவர் எப்படி இருக்காரோ, அப்படித்தான் நேரிலும் ரொம்ப கலகல எனப் பேசிட்டிருப்பார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. தவிர, டப்பிங்கும் பண்ணிட்டிருக்கேன்'' என்றவரிடம், 'கல்யாணம்...' எனக் கேட்டதும், ''சீக்கிரமே நல்ல சேதி சொல்றேங்க'' எனப் புன்னகைக்கிறார்.

மூலக்கதை