``பிக்பாஸ் 2 போட்டியாளர்களே... இப்போ புரியாது... வீட்டுக்குள்ள போங்க, தெரியும்!" - ஹரிஷ் கல்யாண்

விகடன்  விகடன்

சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் `பிக் பாஸ்' மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஹரிஷ் கல்யாண், தற்போது `பியார் பிரேமா காதல்' மூலம் சினிமாவில் கம்பேக் கொடுக்கவிருக்கிறார். பிக் பாஸ் சீஸன் 2 தொடங்கவிருக்கும் நிலையில், பிக் பாஸ் அனுபவம் குறித்தும், அடுத்தடுத்த திட்டங்கள் குறித்தும் ஹரிஷ் கல்யாணிடம் பேசினோம். 

``இப்போ லைஃப் எப்படி இருக்கு?"

``பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அப்புறம்தான் வாழ்க்கையே நல்லா இருக்கு. வெளியே போகும்போது மக்களுக்கு நான் யார்னு தெரிஞ்சிருக்கு. படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. இந்த அனுபவம் நிறைய பாடங்களைக் கத்துக்கொடுத்துருக்கு. நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே நடந்துகிட்ட விதம் என் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் பிடிச்சிருந்தது. பழகுற எல்லோருக்கும் நான் எந்தெந்த விஷயத்துக்கு எப்படியெல்லாம் ரியாக்ட் பண்ணுவேன்னு தெரிஞ்சுக்க பிக் பாஸ் ஒரு வாய்ப்பா இருந்தது. வெளிய வந்ததுக்குப் பிறகு எல்லாரும் என்னைப் பாராட்டினாங்க. பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துகிட்ட போட்டியாளர்கள்கூட நான் நல்ல ஃபிரெண்டா இருக்கேன்!" 

`` `பியார் பிரேமா காதல்' எந்த லெவல்ல இருக்கு?"

``இந்தப் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகிட்டிருக்கு. கடைசியா இந்தப் படத்துக்கு அசர்பைஜான் (Azerbaijan) நாட்டுல ஒரு பாட்டு ஷூட்டிங் பண்ணோம். நந்தா மாஸ்டர் கோரியோகிராஃபி பண்ணியிருக்கார். இந்தப் பாடல் வர்ற 9- ம் தேதி யூ-டியூப்ல ரிலீஸாகுது.  

யுவன் மியூசிக்கும் அவரோட குரலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட குரல்ல நான் நடிச்சிருக்கேன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் பாட்டை கேட்கிறவங்க இதுக்கு அடிமையாகும் அளவுக்கு ஒரு போதை உணர்வை ஏற்படுத்தும். படத்தோட ஸ்கிரிப்டைக் கேட்டுட்டு யுவன் சார், `ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல ரொமான்டிக் லவ் ஆல்பத்துக்கு இசையமைக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு'னு சொல்லி சந்தோஷப்பட்டார். படத்துக்கு இடையில சின்ன சின்ன மியூசிக் ட்ராக்ஸோட `பியார் பிரேமா காதல்' படம் ரசிகர்களை சர்ப்ரைஸில் ஆழ்த்தும்."

``இந்தப் படத்துல எந்த மாதிரியான ரோல்ல நீங்களும் ரைஸாவும் நடிச்சிருக்கீங்க?"

``ரைசாவை நான் பிக் பாஸ்ல எப்படிப் பார்த்தேனோ, அப்படித்தான் ஷூட்டிங்லேயும் இருந்தாங்க. நாங்க ரெண்டுபேரும் படம் முழுக்க டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி செல்லச் சண்டைகள் போட்டுக்கிட்டு இருப்போம். அவங்க எல்லோர்கூடயும் ரொம்ப கலகலப்பா பேசக்கூடிய ஒரு ரோல்ல நடிச்சிருக்காங்க. நான் அதுக்கு நேரெதிரான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். `நான் உண்டு என் வேலை உண்டு'னு இருக்கிற ஆளு. `கொஞ்சம்கூட இவங்க செட்டே ஆகமாட்டாங்க'னு சொல்ற வித்தியாசமான காம்போதான் எங்களோடது. இதுல எங்களுக்குள்ள வர்ற சண்டையைக்கூட திரையில காமெடியா காட்டியிருப்பாங்க. காமெடி, எமோஷன், ஆக்ஷன் கலந்த கலவைதான் இந்தப்படம்." 

``கமல் அரசியலுக்கு வந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?"

``பிக் பாஸ்ல எங்களை வழிநடத்துற ஒருத்தராதான் கமல் சார் இருந்தார். நாங்களும் அவருக்குப் பெரிய மதிப்பு கொடுத்தோம். `நான் பிக் பாஸ் கிடையாது. மக்கள்தான் இங்கே பிக் பாஸ். நான் உங்களுக்கும் மக்களுக்கும் இடையில இருக்கிற பாலம்'னு அடிக்கடி சொல்வார். அவர் கட்சி ஆரம்பித்தது குறித்தும், பரபரப்பா சமூக விஷயங்கள்ல ஈடுபடுறது குறித்தும் அவரோட ட்விட்டர்ல அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்கார். பிக் பாஸ்ல கொஞ்சம் அரசியல் பேசிக்கிட்டு இருந்த கமல் சார், இப்போ முழுநேர அரசியலுக்கு வந்திருக்கார். அவ்வளவுதான்."

`` `பிக் பாஸ் 2' போட்டியாளர்களுக்கு நீங்க சொல்ல நினைக்கிறது என்ன?" 

``போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள் மட்டும்தான். எந்தவொரு அட்வைஸும் கொடுக்கமாட்டேன். இப்போ என்ன சொன்னாலும் அவங்களுக்குப் புரியாது. ஸோ, எந்தவொரு மைண்ட் செட்டையும் வளர்த்துக்காம போறது நல்லது. உண்மையா நடந்துகோங்க. 100 நாள் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க. யார் எந்த அறிவுரை சொன்னாலும் எடுத்துக்காதீங்கனுதான் சொல்வேன். நாங்க ஏற்கெனவே உள்ளே இருந்துருக்கோம். அதனால, எங்களுக்கு எல்லாம் தெரியும்னு சொல்றது வேஸ்ட்."

``அடுத்தது..."

``ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்துல நடிச்சிக்கிட்டு இருக்கேன். `காளி' படத்துல நடிச்ச ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின். இந்த மாசம்தான் ஷூட்டிங் ஆரம்பிச்சிருக்கு. `புரியாத புதிர்' படம் எடுத்த அதே டீம்தான் இந்தப் படத்துலேயும் வேலை பார்க்கிறாங்க. இசையமைப்பாளர் சாம் சிஎஸ், கேமராமேன் தினேஷ் கிருஷ்ணன் எல்லாரும் இருக்காங்க. இந்தப் படத்தோட டைட்டில் அறிவிப்பு கூடிய சீக்கிரம் வெளியாகும்." என்றார், ஹரிஷ் கல்யாண். 

 

மூலக்கதை