"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்!" - நாஞ்சில் சம்பத்

விகடன்  விகடன்
அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்!  நாஞ்சில் சம்பத்

ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா... அப்படியே வந்தால் யாருடன் கூட்டணி வைப்பார்? இதுதான் கடந்த வாரம் வரைக்கும் நெட்டிசன்கள் பலரின் கேள்வியாக இருந்தது. இது எல்லாத்துக்கும் தகுந்தமாதிரி ட்விட்டரில் ஆர்.ஜே.பாலாஜி தனது புரொஃபைல் பிக்சரைப் பல வண்ணங்களுடன்கூடிய காளையின் கொம்புடன் கட்சிச் சின்னம்போல் அலங்கரித்து வைத்தார். ஆர்.ஜே.பாலாஜி கண்டிப்பாக அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கிறார் என்றும் பலரும் சொல்லிவந்தனர். ஆனால், அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டு, `அது எனது திரைப்பட அறிவிப்பு!' என்றிருக்கிறார், பாலாஜி. 

`` `எல்.கே.ஜி' எனும் படத்தில் நடிக்கப்போகிறேன். படத்தின் புரமோஷனுக்காகவே ட்விட்டரில் கட்சி சின்னத்துடன் கூடிய புகைப்படத்தை வைத்தேன். தொடர்ந்து சுவர் விளம்பரமும் வெளியானது. `நான் அரசியலுக்கு வருகிறேன். திரைப்படத்தின் வாயிலாக!" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தின் முக்கியக் கேரக்டரில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார் என்பதுதான், இப்படத்தின் ஹைலைட்! அவரிடம் பேசினேன்.  

``நான் `எல்.கே.ஜி' படத்தில் நடிக்கப்போவது உண்மைதான். என்னைப் படங்களில் நடிக்க ஏற்கெனவே இயக்குநர் பாலா கேட்டார். அவருடைய உதவி இயக்குநர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, `தமிழீழம் குறித்த படத்தை பாலா சார் இயக்கவிருக்கிறார். அதில் பிரபாகரன் வேடத்தில் நடிக்கவேண்டும்' எனக் கேட்டார். நீங்க சொல்ற நாள்களில் என்னால் ஷூட்டிங்கிற்கு வரமுடியுமானு தெரியாது. முக்கியமா, எனக்கு நடிக்கத் தெரியாது' என்று சொன்னேன். `உங்களுக்கு நடிக்கத் தெரியாதா, அதை நாங்கள் அல்லவா சொல்லணும். உங்க பேச்சு நடிப்பால்தானே வருகிறது'னு என்னைத் தூண்டினார். ஆனால், அப்போது நான் நடிக்க விருப்பம் காட்டவில்லை. 

பொதுவாக யாரிடமும் எதற்காகவும் நான் வாய்ப்பு தேடிப்போனது இல்லை. அது மேடையானாலும் சரி, சொந்த வாழ்க்கை ஆனாலும் சரி. ஆர்.ஜே.பாலாஜி என்னைப் பார்க்க வந்தார். `நீங்கள் அரசியலிலிருந்து விலகிவிட்டதா சொல்லியிருக்கீங்க. அந்த நிலைப்பாட்டில் நீங்க உறுதியா இருக்கீங்கன்னா, உங்களை வைத்துப் படம் பண்ணலாம்னு நினைக்கிறோம்'னு சொன்னார். அரசியலிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்த பிறகு எனக்குச் சரியான மேடைப்பேச்சு வாய்ப்புகள் அமையவில்லை. இப்படி வருவாய் வருவதற்கான எல்லா வாசலும் அடைக்கப்பட்டுவிட்டது. வாழ்க்கையில் இன்னும் என் குடும்பத்தின் தேவைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிற ஒரு தமிழன் நான். அதனால், இந்தப் பட வாய்ப்பு மூலம் ஏதாவது கிடைக்குமானால், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைத்தேன். தவிர, நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறபோது, அரசியல்வாதியான நான் சினிமாவுக்கு வந்தால் என்ன? அதனால், `என் கேரக்டர் என்ன?' என பாலாஜியிடம் கேட்டேன். `அரசியலில் வெற்றிபெற முடியாமல்போன அரசியல்வாதியாக வருவீர்கள்' என்றார். என் வாழ்க்கையை நினைத்துக்கொண்டு, உடனே சரியெனச் சொல்லிவிட்டேன்.  

இது தேவைக்காக ஒப்புக்கொண்டேன் என்பதைவிட, என் பன்முகத் திறமையைப் பயன்படுத்தி அங்கேயும் முத்திரை பதிக்கலாம் என முடிவெடுத்தேன். இப்போது தந்தி தொலைக்காட்சியின் `பயணங்கள் முடிவதில்லை' தொடரில் வார இறுதியில் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால், பொழுதுபோக்குவதற்காக நடிக்கவில்லை. எப்போதும் யாருக்காவது பயன்பெற விரும்புபவன் நான். அந்த வகையில்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் முழுக்கதையை இன்னும் கேட்கவில்லை. படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் அப்பாவாக நடிக்கிறேன். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைத்தால், நடிக்கலாம் என்ற முடிவில்தான் இருக்கிறேன். 

கல்லூரியில் படித்த காலங்களில் நானே ஒரு நாடகம் எழுதி, அதில் நாயகனாக நடித்திருக்கிறேன். அந்த நாடகத்துக்குக் `கல் நெஞ்சங்கள்' எனப் பெயர். சினிமாவில் நான் நடிக்கிறேன் என்றதும், பலரும் என்னை அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள். தவிர, மீண்டும் என்னை ஒரு அரசியல் கட்சிக்குள் கொண்டுவர பலரும் முயற்சி செய்கிறார்கள். கட்சி அரசியலில் இனி ஈடுபடுவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். இனி, நாஞ்சில் சம்பத் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டான் என்பதை அறிவிக்க, இந்த சினிமா வாய்ப்பு எனக்கொரு வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது.  

சினிமாவில் நான் நடிக்கவிருப்பது, என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி. `அப்பா, இனி ஆபத்தில்லாத பயணத்தில் இருப்பார்' எனப் பசங்க வழியனுப்பி வைத்தார்கள். தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் பார்க்கப்போகிறேன். தந்தித் தொலைக்காட்சியில் `பயணங்கள் முடிவதில்லை' நிகழ்ச்சிக்காக நிறைய படிக்க வேண்டிருக்கிறது. அந்த நேரங்களைத் தொந்தரவு செய்யாமல், தொடர்ந்து பல படங்கள் பார்க்கப்போகிறேன்!" என்கிறார், நாஞ்சில் சம்பத். 

மூலக்கதை