‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு

கமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன் பல்வேறு தடைகளை எதிர்கொண்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு அப்படத்துக்கு தடை விதித்தது. இதில் மனம் உடைந்த கமல், ‘நாட்டை விட்டே வெளியேறுவேன்’ என குறிப்பிட்டார்.

இதையடுத்து அரசின் தடைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து திரையுலகினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர். பின்னர் தடை நீங்கி படம் வெளியானது.

சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த கமல், இப்படத்துக்கு ஏற்பட்ட தடை உள்ளிட்ட பிரச்னை காரணமாக தனக்கு சுமார் ரூ. 60 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சுமத்தினார்.

விஸ்வரூபம் முதல்பாகம் உருவானபோதே அதன் 2ம் பாகத்தையும் உருவாக்கி வந்தார் கமல். முதல்பாகம் வெளியான ஆண்டின் இறுதியில் இப்படத்தை வெளியிட எண்ணியிருந்தார்.

படத்தை தயாரித்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதையடுத்து அப்படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. 4 வருடம் முடங்கிக் கிடந்த இப்படத்தின் முழுபொறுப்பையும் சமீபத்தில் கமல் ஏற்றுக்கொண்டதுடன் பட ரிலீஸுக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினார்.

இந்த ஆண்டு இறுதியில் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கிறது.

படத்தின் புதிய போஸ்டர் நேற்று இரவு வெளியிட உள்ளதாக காலையிலேயே கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி இரவு 7 மணி அளவில் புதிய போஸ்டரை வெளியிட்டார்.

தேசிய கொடிக்கு பின்னால் கமல் நிற்பதுபோலவும், அந்த கொடியை தனது இதயத்தோடு சேர்த்து வைத்து மரியாதை செய்வதுபோலவும் காட்சி இடம்பெற்றிருந்ததுடன், ‘நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

.

மூலக்கதை