சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்

சிங்கப்பூரில் ஒரு மாத தமிழ் மொழி விழா நடைபெறுகிறது. அரசு ஆதரவோடு வளர் தமிழ் இயக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தி வரும் இந்த தமிழ் மொழி விழாவை, இந்த ஆண்டு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவரும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி என்ற மகா கவி பாடல் நாட்டியத்துடன் நிகழ்வு தொடங்கியது.

ஏப். 1ம் தொடங்கிய விழா, ஏப். 30 முடிய நடைபெறுகிறது. ஷமீர், கௌசிக், இளமாறன், இர்பானுல்லா, விஷ்ணு பாலாஜி, பிரவீன் போன்றோரின் தமிழ் இலக்கியங்களை நினைவூட்டும் இசை பலத்த கரவொலி பெற்றது. ” அழகு…அழகு ‘ என்ற யுவபாரதி நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த இளம் நாட்டிய பெண்களின் பரதம் கண்கொள்ளாக் காட்சி. தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாவேந்தர் பாடலுக்கு உள்ளூர்க் கலைஞரோடு அமெரிக்க இசைக் கலைஞரின் பின்னணி இசை பாராட்டப்பட்டது.

சிங்கப்பூரின் மூத்த பத்திரிகையாளர் வை.திருநாவுக்கரசு, படைப்பாளர் செ.வே.சண்முகம் ஆகியோரைப் பற்றிய காணொளி மற்றும் தஞ்சாவூர் பாரம்பரிய இசைப்பள்ளியைச் சேர்ந்த கலைஞர்களின் ” ஓடி விளையாடு பாப்பா ” என்ற சேர்ந்திசையும் இடம் பெற்றன. தெனாலிராமன் நாடகம், கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாடகப் படச்சுருள் என் அனைத்து நிகழ்ச்சிகளையும் காட்சிப்படுத்தினர். தொடக்க விழாவில் சிங்கப்பூர் அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.

வளர் தமிழ் இயக்கத்தலைவர் கூறுகையில், இவ்வாண்டு தேசிய நூலக வாரியம், தேசிய புத்தக மேம்பாட்டுக் கழகம், கல்வித்துறையின் கற்றல் வளர்ச்சிக் குழு, உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், சிங்கப்பூரின் மூன்று பல்கலைக் கழகங்கள், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த நாடகக் குழுக்கள் பங்கேற்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகம் ஒரு அறக் கட்டளை தொடங்கியிருப்பதையும் 2018 முதல் இளங்கலை தமிழ் மொழி இலக்கிய மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையாக வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார். ஜெய்கணேஷ், ஷாமினி, கார்த்திக் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.

மூலக்கதை