ஜெ. அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்க டிடிவி தினகரன் காரணமா? ஓ.பி.எஸ்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஜெ. அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்க டிடிவி தினகரன் காரணமா? ஓ.பி.எஸ்

அமைச்சர் பதவி கிடைக்க தினகரன் காரணம் என்று கூறிவருவது தவறு. எனக்கு கிடைத்த உயர் பதவிகளுக்கு நான் ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்ததே காரணம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து தனியார் தொலைகாட்சி சேனலுக்கு ஓபிஎஸ் அளித்த பேட்டியில் கூறுகையில், 1980-இல் சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா எனக்கு வாய்ப்பளித்தார். அப்போது அவர் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறி என் மேல் நம்பிக்கை வைத்தார். அவரது நம்பிக்கையை காப்பாற்றினேன்.

தொடர்ந்து அவருக்கு விசுவாசமாக இருந்தேன். அதற்கு ஜெயலலிதா அவர்கள் எனக்கு அமைச்சர் பதவியையும், இக்கட்டான சூழ்நிலைகளில் எனக்கு முதல்வர் பதவியையும் வழங்கி அழகு பார்த்தார்.மற்றபடி தினகரன்தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க ஜெயலலிதாவிடம் சிபாரிசு செய்தார் என்று கூறுவது தவறான தகவலாகும். அவருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார். ஆனால் தோற்றுபோனார்.

பின்னர் அவரை ராஜ்யசபா எம்.பி. யாக்கினார். அதன்பிறகு கடந்த 2007 முதல் அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார்.திமுகவை எதிர்க்கவே எம்ஜிஆர் 1972-இல் அதிமுகவை தொடங்கினார். அவரது வழியை ஜெயலலிதாவும் பின்தொடர்ந்தார். அவரது வழியை நானும் தொடருவேன். மற்றபடி சசிகலாவும், தினகரனும் சொல்வது போல் என்னை திமுக இயக்கவில்லை.

எனக்கும் ஸ்டாலினுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தினகரன் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை.அதேபோல் பாஜகவுடன் எனக்கு தொடர்பிருப்பதாகவும் கூறுவது தவறு. பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா என்னிடம் சில கோரிக்கைகளை வைத்தார்.

ஆனால் அதற்கு நான் மறுத்துவிட்டேன். மதசார்பற்றத்தன்மையுடன் ஜெயலலிதா எவ்வாறு கட்சியை வழிநடத்தினாரோ அதே வழியில் நாங்களும் செயல்படுவோம்.1972-இல் எம்ஜிஆர் கட்சியை தொடங்கும் போது அவர் மட்டுமே எம்எல்ஏ-வாக இருந்தார்.ஆனால் தொண்டர்களும் மக்களும் அவர் பக்கம் இருந்தனர். அதை போல் மக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு நாங்கள் காரணம் அல்ல.ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தடியடி தேவையற்றது. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன் உண்மையாக ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் கலைந்து சென்றுவிட்டனர். மற்றவர்கள் போராட்டத்தை திசை திருப்ப வந்தவர்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மூலக்கதை