ஞானசாரரை கைது செய்யும் முயற்சி தோல்வியடைந்தது

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஞானசாரரை கைது செய்யும் முயற்சி தோல்வியடைந்தது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக, கொழும்பிலிருந்து சென்றிருந்த விசேட பொலிஸ் குழு எடுத்த முயற்சியினால், குருநாகலில், சனிக்கிழமை இரவு 11 மணியளவில் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.   

குருநாகல் வெல்லவ பிரதேசத்தில் உள்ள விகாரையில் தர்ம போதையை நிகழ்த்திவிட்டு, கொழும்பை நோக்கித் திரும்பிகொண்டிருந்த போதே, தேரரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகின்றது.   

குருநாகல்-தம்புள்ளை வீதியில் தோரயாய பிரதேசத்தில், வீதிக்கு குறுக்காக பொலிஸ் பஸ்ஸை நிறுத்தி, ஞானசார தேரர் பயணித்த வாகனத்தை வழிமறித்து, அவரைக் கைது செய்வதற்கான முயற்சியை, கொழும்பிலிருந்து சென்றிருந்த குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவே, மேற்கொண்டிருந்தது.   

இந்நிலையில், அவ்விடத்தில் பெருந்திரளான தேரர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்து, ஞானசார தேரர் கைதுசெய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு, எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர். அதனால், அவ்விடத்தில் மிகவும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.   

இதேவேளை, ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர், முஸ்லிம் கிராமமொன்றுக்குள் நுழைவதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்ததாகவும், அந்த கிராமத்துக்கு செல்லும் பாதையை பொலிஸார், மறித்ததையடுத்தே, ஞானசார தேரர் தலைமையிலான குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அறியமுடிகின்றது.   

இதனையடுத்தே, பொலிஸார் ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கு முயற்சித்தனர் என்றும், இதன்போதே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

அப்போது, ஞானசார தேரர், பிரதமரையும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும்  கீழ்த்தரமாகக் கதைத்தாகக் கூறப்படுகிறது.  

அவ்விடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொலிஸார் இருந்ததாக அறியமுடிகின்றது. எனினும், பொலிஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சரணடைவதாக ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கியதை அடுத்தே, அவரை பொலிஸார் விடுவித்தனர் என்றும் அறியமுடிகின்றது. 

மூலக்கதை