ஆரையம்பதி ஆலய கட்டிடம் சரிந்தது காயமடைந்த 19 பேரில் 11 பேர் வெளியேறினர்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஆரையம்பதி ஆலய கட்டிடம் சரிந்தது காயமடைந்த 19 பேரில் 11 பேர் வெளியேறினர்

-ரீ.எல்.ஜவ்பர்கான்  
மட்டக்களப்பு- ஆரையம்பதி ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலயத்தின் மகாமண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தோரில் 11 பேர், சிகிச்சையைப்பெற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியேறியுள்ளனர்.  

சனிக்கிழமை மாலை 4:15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 19 பேர் காயமடைந்தனர். அவரிகளில், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 13 பேரில் 11பேர் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனர்.  

இதேவேளை, ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அல்மேரா தெரிவித்தார்.  

சம்பவத்தில் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, மேலும் ஆறுபேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.   

குறித்த கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.  

ஆரையம்பதி முத்துமாரியம்மன் ஆலய மகாமண்டப கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்து, கொங்கிறீட் பிளேட் போடுவதற்காக கொங்கிறீட் கொட்டப்பட்டு கொண்டிருந்தபோதே மேற்படி கட்டிடம் இடிந்து விழுந்து.

இதன்போது, அங்கு பணியாற்றிகொண்டிருந்த தொழிலாளர்களில், 19 பேர் காயமடைந்தனர்.  

கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்தமையால், இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கைகள், நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவித்த, காத்தான்குடி பொலிசார் சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர். 

மூலக்கதை