சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரவிருக்கும் ஓய்வூதிய சீர்திருத்தம்!

PARIS TAMIL  PARIS TAMIL
சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரவிருக்கும் ஓய்வூதிய சீர்திருத்தம்!

 சுவிட்சர்லாந்தில் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய சீர்திருத்த மசோதா குறித்த பொதுமக்கள் வாக்கெடுப்பு வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கிறது.

 
சுவிட்சர்லாந்தில் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் சில சீர்திருத்தங்களை முன்வைத்து கடந்த 2 ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வந்தது.
 
தற்போது சுவிஸ் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலை பெற்றதை அடுத்து வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி பொதுமக்களின் கருத்தை அறியும் பொருட்டு பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
 
பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய ஓய்வூதிய சீர்திருத்தம் அமுலுக்கு வரும் எனில், பெண்களின் ஓய்வு பெறும் வயது 64-ல் இருந்து 65 என உயரும். மட்டுமின்றி ஆண்டு வருவாயில் இருந்து ஓய்வூதியமாக வழங்கும் தொகையானது 6.8 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறையும், இருப்பினும் ஊதியத்தில் இருந்து பிடித்தம் சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
 
அதனை ஈடுகட்ட மாதந்தோறும் 70 பிராங்க் AVS/AHV வகையினில் ஊக்க ஊதியமாக 2019 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படும். குறித்த ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான தொகையை தற்போதுள்ள 8 சதவிகிதத்தில் இருந்து மேலும் 0.6 விழுக்காடு மதிப்புக்கூட்டு வரியை அதிகரிப்பதன் மூலம் ஈடுகட்டப்படும்.
 
சுவிஸ் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்திருந்தபோதிலும் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே இருவேறு கருத்துகள் இருந்து வருகிறது.
 
குறித்த திட்டத்தால் மூத்த குடிமக்கள் மேலும் அல்லலுக்கு உள்ளாவார்கள் எனவும் இது தற்போதையை சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
 
ஆனால், இறுதி முடிவு எடுக்க வேண்டியது மக்கள் என்பதால், வரும் செப்டம்பர் மாதம் உண்மை நிலவரம் தெரிய வரும்.
 
கடந்த 2014 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், உலகிலேயே சிறந்த ஓய்வூதிய திட்டம் அமுலில் இருக்கும் நாடு சுவிஸ் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை