வேன் டிரைவர் அலட்சியத்தால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு

தினமலர்  தினமலர்

ஈசூர்: வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது, வேன் மோதி இறந்ததற்கு, வேன் டிரைவர் அலட்சியத்துடன், அதிவேக மாக வேனை ஓட்டி சென்றதே காரணம் என, கூறப்படுகிறது.
சூணாம்பேடு அடுத்த, ஈசூர் காலனி பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவருக்கு பூஜேஷ், மதியரசு என, இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் மதியரசு, 3. கடந்த சனிக்கிழமை மாலை, 5:00 மணிக்கு, வீட்டின் எதிரே உள்ள தெருவில், விளையாடி கொண்டிருந்தான்.அப்போது, தாம்பரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து, பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன், சிறுவன் மீது மோதியது. இதில், சிறுவன் மதியரசு துாக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தான்.
இதை பார்த்ததும், வேன் டிரைவர் சுரேஷ் அங்கிருந்து தப்பி விட்டான்.குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் அலறியடித்து, அருகில் உள்ள, கயப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தனியார் கார் மூலம் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
தகவல் அறிந்த சூணாம்பேடு போலீசார், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதி வாசிகளிடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


முறையற்ற செயல்களே காரணம்


கிராமப்புறங்களில் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள், முறையாக பயிற்சி பெறாமல், பழக்கத்தின் அடிப்படையில் வாகனங்களை இயக்குகின்றனர். அவர்களில் பலர், சிறு வயதினராகவும், யாருக்கும் கட்டுப்படாதவர்களாகவும் உள்ளனர்.அத்தகையோரில் பலர், போதை பாக்குகளை உட்கொள்வது; வாகனங்களை இயக்கும் போதே, மது அருந்தி இருப்பது; வாகனங்களில் அதிக சத்தத்துடன், பாடல்களை ஒலிக்க விடுவது; இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்கள் மற்றும் பிறருடன் பேசிக் கொண்டே செல்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.வாடகை வேன் ஓட்டும் டிரைவர்கள் ஒருவர் கூட, யூனிபார்ம் அணிவதில்லை. வாகனங்களை முறையாக பரிசோதிப்பதில்லை.இதை, போலீசார் கண்டுகொள்வதில்லை.இது போன்ற அரை, குறை டிரைவர்களால், மதியரசு போன்ற எத்தனையோ பேர், தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். மேலும் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க, வாகன போக்குவரத்து துறையும், காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.



அலட்சியம் சிறுவன் உயிரிழந்ததற்கு காரணமான டிரைவர், எப்போதும் அதிவேகமாக வண்டியை ஓட்டி செல்வார் என, கூறப்படுகிறது. தலைமறைவான டிரைவரை இதுவரை கைது செய்யவில்லை இப்பகுதியில் இது போன்ற விபத்து நடக்கும் போது, 108 ஆம்புலன்ஸ் விரைவில் வருவதில்லை. போன் செய்தால் ஆம்புலன்ஸ் வருவதற்கு, இரண்டு மணி நேரம் ஆகும் என தெரிவிக்கின்றனர். அழைத்ததும், 9 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வர வேண்டும் என்பது அரசின் உத்தரவு உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு வேன் உரிமையாளரோ, போலீசாரோ எந்த ஆறுதலையும், நடவடிக்கை குறித்து எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என, சிறுவனின் பெற்றோர் கூறுகின்றனர்.

மூலக்கதை