குடிநீர் ஆதாரமான சோழவரம் ஏரி நீரின்றி வறண்டது; மாற்று வழிக்கு வாரியம் தீர்வு காணுமா?

தினமலர்  தினமலர்
குடிநீர் ஆதாரமான சோழவரம் ஏரி நீரின்றி வறண்டது; மாற்று வழிக்கு வாரியம் தீர்வு காணுமா?

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, நீரின்றி வறண்டு கிடக்கிறது. ஏரியில் ஆங்காங்கே குட்டையாக தேங்கியுள்ள தண்ணீரை, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியுமா என, வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோடையை சமாளிக்க, குடிநீர் வாரிய அதிகாரிகள் என்ன செய்ய போகின்றனர் என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரி, 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. மழைக்காலத்தில், பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் கொற்றலை ஆற்றில் இருந்து சோழவரம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்பட்டு, சேமிக்கப்படுகிறது. பின், அங்குள்ள மதகுகள் வழியாக, பேபி கால்வாய் மூலம், புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்கு அனுப்பப்படுகிறது.
நீர் இறைச்சும் பணிஇந்நிலையில், கடந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை இல்லாததால், ஏரியில் நீர்ப்பிடிப்பு குறைவாகவே இருந்தது. இதனால், ஜன., 26 முதல், ஏரியின் மையப்பகுதியில் இருந்த நீர், கால்வாய்கள் அமைத்து, மதகு அருகே கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, மூன்று ராட்சத மோட்டார்கள் மூலம், புழல் ஏரிக்கு அனுப்பும் பணிகளை, குடிநீர் வாரியம் மேற்கொண்டது.கால்வாயில் சேகரித்திருந்த நீரும், குறைந்து கொண்டே வந்ததால், நீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட மோட்டார்கள், திடீரென நிறுத்தப்பட்டன. இதனால், வறண்டு காணப்படும் ஏரி, கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும், சேறுடன் உள்ள பகுதிகளில், பறவைகள் இரை தேடும் இடமாகவும் மாறி உள்ளது.

இதையடுத்து, ஏரி முழுவதும், ஆங்காங்கே, மணல் தேவைக்காக தோண்டப்பட்ட சிறு சிறு குட்டைகளில் தேங்கியுள்ள நீரை ஒருங்கிணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அவற்றை கால்வாய் மூலம் ஒன்று சேர்த்து, மீண்டும், ராட்சத மோட்டார்கள் மூலம் வினியோகிக்க, குடிநீர் வாரியம் திட்டமிட்டு உள்ளது. மேலும், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
குடிநீர் கிடைப்பதில் சிக்கல்சோழவரம் ஏரி வறண்டு கிடப்பதால், கோடையில் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது, அனைத்து தரப்பினரையும் கவலையடைய செய்துள்ள நிலையில், மணல் திருடும் கொள்ளையர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு, இதே நாளில், ஏரியில், 308 மில்லியன் கனஅடிநீர் இருந்தது. இந்த ஆண்டு வறண்டு கிடக்கிறது.
தண்ணீர் இல்லைகடந்த, 52 நாட்களாக, ராட்சத மோட்டார்கள் மூலம், ஏரியின் மத்திய பகுதியில் இருந்த நீரை கால்வாய் மூலம் கொண்டு வந்து, புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு விட்டது. தற்போது, இங்கு தண்ணீர் இல்லை. ஏரியில், ஆங்காங்கே, குட்டைகளில் தேங்கியுள்ள நீரையும் உறிஞ்சுவதற்கான பணிகளை துவங்கி உள்ளோம். எங்கெங்கு தண்ணீர் உள்ளது என, தேடி வருகிறோம்.குடிநீர் வாரிய அதிகாரி, சோழவரம் ஏரி


குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்மழை காலத்தில் தேங்கும் மழைநீர், அடுத்த ஆண்டு வரை இருக்கும். இந்த ஆண்டு தான் தரை தெரியும் அளவிற்கு வறண்டு விட்டது. இருந்த சிறிதளவு தண்ணீரும், குடிநீர் தேவைக்காக, சில தினங்களாக மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு விட்டது. சென்னை மட்டுமின்றி, எங்கள் பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. மாற்று ஏற்பாட்டுக்கு, குடிநீர் வாரியம் என்ன செய்ய போகிறது?கே.ராகவேந்திரன், விஜயநல்லுார், சோழவரம்


கால்வாய்கள் அமைக்க வேண்டும்அலமாதி, எருமைவெட்டிபாளையம் பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான ஆழங்களில் ஏரியில் மண் எடுக்கப்பட்டு விட்டது. இதனால், மழைநீர் சமநிலையில் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி விடுகிறது. தற்போது ஏரி வறண்டு கிடப்பதால், இந்த பள்ளங்களை இணைத்து, கால்வாய்கள் அமைத்து, அதை மதகு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். போலீசார் ஆதரவுடன் ஏரியில் நடைபெறும் மண் திருட்டையும் தடுக்க வேண்டும்.அ.து.கோதண்டன், மாவட்ட செயலர், விவசாய தொழிலாளர் சங்கம், சோழவரம்


- நமது நிருபர் -

மூலக்கதை