பூமிப்பந்து மாசுபடுவதை தவிர்த்து பாதுகாக்க 'மரம் வளர்ப்போம், மழைபெறுவோம்

தினமலர்  தினமலர்

பெரியகுளம்:பசுமையை பாதுகாக்கும் அரசு பெண்கள் பள்ளி சமீபகாலமாக புவி வெப்பமயமாதல் அதிகமாகி வறட்சி ஏற்படுகிறது. ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதுதான் இதற்கு காரணம். 'மரம் வளர்ப்போம், மழைபெறுவோம்' என்ற வாசகம் எழுத்தளவில் இருந்தாலும் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் இல்லை. இதனால் மழை பொய்த்துவருகிறது. இதை தவிர்க்க வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம். அப்போதுதான் பூமிப்பந்து மாசுபடுவதை தவிர்த்து பாதுகாக்க முடியும்.
சிறப்பு வகுப்பு
பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விவசாயம் சம்பந்தப்பட்ட பயிற்சி, சிறப்பு வகுப்பாக நடத்தப்படுகிறது. மாணவிகளுக்கு செடி, கொடி, மரக்கன்றுக்கு தண்ணீர் விடும் பணி மட்டும் ஒதுக்காமல் அவை வளர்வதற்கு இயற்கையின் பங்கு, மண்வளம், இயற்கை உரம் உள்ளிட்ட விபரங்கள் விளக்கப்படுகிறது.
மூலிகை தாவரங்கள்
தாவரவியல் ஆசிரியர் எம்.பாண்டியன் கூறுகையில்,“பள்ளியில் மூலிகைத் தாவரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. துளசி, துாதுவளை, கருநொச்சி, மலைவேம்பு, சிரியாநங்கை, பூவரசு, புங்கை, நெல்லி, நாவல் உட்பட பல மூலிகைச்செடி, மரம், மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. இதில் மாணவிகளின் பங்களிப்பு அதிகம். சிறுதானிய உணவு வகைகள் குறித்து கருத்தரங்கம் மற்றும் செயல்விளக்கம் நடத்தப்படுகிறது.
பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மூலிகைப்பண்ணைக்கு, செய்முறை பயிற்சிக்கு மாணவிகள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். பள்ளியில் மரம், செடி வளர்ப்பதன் மூலம் பசுமையை நேசிக்கும் வழிமுறையை மாணவிகள் வீட்டிலும் பின்பற்ற பெற்றோரை வலியுறுத்துகின்றனர்.
கூவமான வராகநதி
கே.ராம்கி, சமூக ஆர்வலர், பெரியகுளம்: பெரியகுளம் மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதியில் உற்பத்தியாவது வராகநதி. கொடைக்கானல் வனப்பகுயில், பெரியகுளம் பகுதி மக்கள் கட்டிய வற்றாத 'பேரிஜம் ஏரியிலிருந்து' வழிந்தோடும் நீர் 15 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை வருகிறது. பெரியகுளம் நகர் பகுதி மற்றும் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தாமரைக்குளம், தென்கரை, வடுகபட்டி பேரூராட்சி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளுக்கும், 50க்கும் அதிகமான உட்கடை கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து, 'அட்சய பாத்திரமாக' திகழ்ந்தது வராகநதி. பெரியகுளம் கண்மாய், தாமரைக்குளம் கண்மாய், பாப்பிபட்டி கண்மாய், மேல்மங்கலம் பகுதி உட்பட 3200 ஏக்கர் பாசனத்திற்கு வராகநதி தண்ணீர் வார்க்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன் வராகநதி மணல் பரப்பில் கலைநிகழ்ச்சி, அரசியல் கட்சிகளின் கூட்டம் நடக்கும். இன்றோ பாதாள சாக்கடை கலந்து நீர் மாசுபட்டுள்ளது. உடம்பு நனைத்து, தலை குளித்து, நீச்சல் கற்றுக்கொண்ட வராகநதியில், கால் நனைக்கவே சிரமமாக உள்ளது. ஆட்டிறைச்சி, மீன், கோழி, பன்றி இறைச்சி கழிவுகளை ஊற்றி, ஆற்றை பல்வேறு வகைகளில் மாசுபடுத்தி, தற்போது வராகநதி, கூவமாக மாறி உள்ளது. இதனை துார்வார வேண்டியது அவசியம். இதன்மூலம் மாசில்லாத பெரியகுளத்தை உருவாக்கி, எதிர்கால சந்ததியினருக்கு குடிநீர், பாசன பிரச்னையை தவிர்க்கலாம்.

மூலக்கதை