நீர் வழிப்பாதைகளை மீட்க தொகை ஒதுக்கீடு நதி வழியை தேடி... நிதி வந்தது நாலு கோடி! மழை பெய்தால் தடையின்றி வரும் தண்ணீர்!

தினமலர்  தினமலர்
நீர் வழிப்பாதைகளை மீட்க தொகை ஒதுக்கீடு நதி வழியை தேடி... நிதி வந்தது நாலு கோடி! மழை பெய்தால் தடையின்றி வரும் தண்ணீர்!

குளங்களுக்கு செல்லும் நீராதாரத்தை பாதுகாக்கவும் நீர் வழிப்பாதையை செப்பனிடவும், ஊரக வளர்ச்சித்துறைக்கு 1.70 கோடியும், பொதுப்பணித்துறைக்கு 2.31 கோடியும் கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள, 12 குளங்கள் உட்பட, நொய்யல் நதி பாயும், 18 குளங்கள், மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளன. இவற்றில், மாநகருக்குள் அமைந்துள்ள எட்டு குளங்கள் மட்டும், மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளன; மற்றவை, பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் இருக்கின்றன. நொய்யல் நதியையும், நதி வழிப்பாதைகளையும், குளங்களையும் முழுமையாக மீட்டெடுக்க, 'சிறுதுளி' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், களமிறங்கிப் பணியாற்றி வருகின்றன.கேட்டது கிடைக்கவில்லை!இந்த பணிகளுக்கு, அரசு நிதி ஒதுக்கி, அனைத்து குளங்களையும் துார்வாரி சுத்தம் செய்யவும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி, நீர் வழிப்பாதைகளைச் சீரமைக்கவும் வேண்டுமென்று தன்னார்வ அமைப்பினரும், சூழல் ஆர்வலர்களும், விவசாயிகளும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.இதற்குத் தேவையான நிதி குறித்து, பொதுப்பணித்துறையும் மதிப்பீடு தயாரித்து, பல ஆண்டுகளுக்கு முன்பே, அரசுக்கு அனுப்பி, ஒப்புதலும், நிதியும் கோரியிருந்தது. ஆனால், அந்த நிதி ஒதுக்கப்படவே இல்லை.கோவை மக்கள் மற்றும் மாநகராட்சி உதவியுடன், அறக்கட்டளையும், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் போன்ற குளங்களை துார்வாரியுள்ளன. இருப்பினும், இந்த குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரக்கூடிய, நீர் வழிப்பாதைகள், பெருமளவில் புதர் மண்டியும், மண் மற்றும் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டும் கிடக்கின்றன. இவற்றைத் துார்வாரினால் மட்டுமே, குளங்களுக்கு தண்ணீர் வரும்.குளத்தில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயரும்; அதனால், கோவையிலுள்ள நீர்வழிப்பாதைகளை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்; அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு பல தரப்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.மாவட்ட நிர்வாகம் பரிந்துரைஇதையடுத்து, மாவட்ட வேளாண் மற்றும் வேளாண் தொழில் நுட்பத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை ஆகியவை இணைந்து, கோவையிலுள்ள நொய்யல் நீர் வழிப்பாதையின் அளவீடு என்ன, கிளை வாய்க்கால்களின் எண்ணிக்கை என்ன, ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டிய பரப்பு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகம் வசம் ஒப்படைத்தன. இந்த பணிக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுசெய்யுமாறு, அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது.இதற்கிடையில், குளம், குட்டை, ஏரி, ஓடை ஆகியவற்றிற்கு வரும் நீர் வழிப்பாதைகளில் உள்ள நீர் வழித்தடுப்புகளை அப்புறப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தவும் முடிவு செய்து, அதற்கான வழித்தட வரைபடத்தை பொதுப்பணித்துறை தயார் செய்தது.அதன்படி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக நொய்யலாறு பாயும் பகுதியில், 50 நீர் வழிப்பாதைகள் மற்றும் கிளை வாய்க்கால்கள் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைகளை ஏற்று, நொய்யல் நீர் வழிப்பாதைகளை சீரமைக்கவும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், பொதுப்பணித்துறைக்கு, 2 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒரு கோடியே, 70 லட்சம் ரூபாயுமாக மொத்தம் 4 கோடியே,ஒரு லட்சத்து50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.கிடைத்தது கொஞ்சமே!இதற்கான பணிகளை உடனே துவக்கி, தென் மேற்கு பருவமழைக் காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டுமென்று, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படை பணியாளர்களை கொண்டு பொதுப்பணித்துறைப் பணியையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்களை கொண்டு, ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த பணிகளையும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், நீர்வளத்தை பெருக்கும் நோக்கில் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.நீர்வள ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அப்புறப்படுத்தப்படும். குளங்களுக்கு நீர் வரத்து அதிகரிக்கும்; தென்மேற்குப் பருவமழை காலத்தில் நீர் ஆதாரங்களில், நீர் தேங்கி நிற்கும் நிலத்தடிநீர் மட்டம் கட்டாயம் உயரும் கோவையில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படாது,'' என்றார்,யானைப்பசிக்கு சோளப்பொரி போல, இந்த நிதி இருந்தாலும், இந்த நிதியையாவது முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்; இந்தநிதியுடன், கடமையைமுடித்துக்கொள்ளாமல், நீர் நிலைகளைமுழுமையாக மீட்டெடுப்பதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்குவதோடு, தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே, கோவை மக்களின் ஒருமித்த கோரிக்கை.
வேண்டாம் விளம்பரம்!துார்வாருகிறோம் என்ற பெயரில் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு, நீர்வழிப்பாதைகளை சேதப்படுத்தும் வகையில், சுத்தப்படுத்தவேண்டாம்; முட்புதர்கள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை உண்மையிலேயே அகற்றிபணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்; நீர் வழிப்பாதைகளை மீட்பது போல, போட்டோவுக்கு,'போஸ்' கொடுத்து, விளம்பரம் தேட முயற்சிக்க வேண்டாம் என்று பொதுநல அமைப்புகள், பொதுப்பணி சேவா கேந்திரங்களுக்கு மாவட்ட நிர்வாகம்வேண்டுகோள் விடுத்துள்ளது.

-நமது நிருபர்-

மூலக்கதை