மின் மோட்டார்கள் பறிமுதல் செய்வதில் மாநகராட்சிஆர்வம்:பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
மின் மோட்டார்கள் பறிமுதல் செய்வதில் மாநகராட்சிஆர்வம்:பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக குற்றச்சாட்டு

மதுரை;மதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், நகரின் அனைத்து பகுதிகளில் நடக்கும் குடிநீர் திருட்டை தடுக்க மின்மோட்டார்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாநகராட்சியின் 4மண்டலங்களிலும் முறைகேடாக தண்ணீர் உறிஞ்சிய 184 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று நகரின் பல இடங்களில் நடந்த சோதனையில் 138 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், சில இடங்களில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலரது வீடுகளை சோதனை செய்து முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.'குடிநீர் திருட்டை மாநகராட்சியால் தடுக்கவே முடியாது. இதனால் ஊழலும், முறைகேடுகளும் தான் அதிகரிக்கும். அதனால் குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் சப்ளையாகும் இரண்டு மணி நேரம் அந்த பகுதிகளில் மின்தடை செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும்,' என பல குடியிருப்போர் சங்கங்கள் மூலம் மாநகராட்சிக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கை ஏற்புடையதாக இருந்தாலும், மின் இணைப்பை துண்டிப்பதால் மக்கள் வேறுவிதங்களில் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை வரும். இதனால் இதையும் நடைமுறைப்படுத்த முடியாது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: குடிநீர் திருட்டு தொடர்பான புகார் தெரிவிக்க தொலை பேசி மற்றும் வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. அதன் அடிப்படையிலும் சோதனைகள் செய்கிறோம். சோதனையின் போது தண்ணீர் உறிஞ்சும் நிலையில் உள்ள மோட்டார்களை தான் பறிமுதல் செய்கிறோம். மின் மோட்டார் பயன்படுத்தாத நிலையில் இருந்தால் எச்சரிக்கிறோம். தொடர்ந்து இது போன்ற தவறுகள் செய்வோரது இணைப்புகள் துண்டிக்கப்படும்.இது போன்ற தவறுகளை பலர் தொடர்வதால் திட்டமிட்டபடி நகரில் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் இந்த மின்மோட்டார் பறிமுதல் நடவடிக்கைகள் கோடை முடியும் வரை தொடர்ந்து நடக்கும். இதற்கான தனி குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும், என்றனர்.
புகார் தெரிவிக்க...
---குடிநீர் திருட்டு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சிக்கு 0452 - 252 5252 மற்றும் வாட்ஸ்ஆப் எண் 74491 04104ல் தெரிவிக்கலாம்.

மூலக்கதை