காய்கறி வரத்து குறைந்ததால் மார்க்கெட் களையிழந்தது: ஒட்டன்சத்திரம் பகுதியில் வறட்சி பாதிப்பு

தினமலர்  தினமலர்

ஒட்டன்சத்திரம்;தொடர் வறட்சி காரணமாக காய்கறி வரத்து குறைந்ததால், ஒட்டன்சத்திரம் மார்க்கெட் களையிழந்து காணப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பெரிய மார்க்கெட்களில், ஒன்றாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் கர்நாடகா, ஆந்திராவில், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் விளையும் காய்கறிகளும் இங்கு விற்பனைக்கு வருகிறது. இதனால் காலை 7 மணிக்கு சின்ன வெங்காயம் ஏலத்துடன் தொடங்கும் மார்க்கெட், நள்ளிரவு தாண்டியும் சுறுசுறுப்புடன் இயங்கும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்ததால், இப்பகுதியில் வேளாண் தொழில் முழுவீச்சில் நடக்கவில்லை. கிணற்று நீரை பயன்படுத்தி தக்காளி, வெங்காயம், வெண்டை, முருங்கை போன்ற காய்கறி வகைகள் பயிரிடப்பட்டன.
இந்த ஆண்டும் பருவமழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் கடந்த சில வாரங்களாக காய்கறி வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. மார்க்கெட்டை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
காய்கறி மார்க்கெட் உரிமையாளர்கள் நலச் சங்க முன்னாள் செயலாளர் ஆறுமுகம் கூறுகையில்,“ சாதாரண நாட்களில் எங்கள் கடைக்கு தினமும் 2 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து இருக்கும், ஆனால் தற்போது 100 பெட்டிகளே வருகின்றன,” என்றார்.

மூலக்கதை