நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கான ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல்: அருண்ஜெட்லி அறிமுகம் செய்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கான ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல்: அருண்ஜெட்லி அறிமுகம் செய்தார்

புதுடெல்லி- ஜிஎஸ்டி துணை மசோதாக்களை மக்களவையில் இன்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் விதமாக ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டது. மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த கருத்தை பெறுவதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது.

12 கூட்டங்கள் நடத்தப்பட்டு ஜிஎஸ்டி மசோதா மீதான ஒருங்கிணைந்த கருத்துகள் பெறப்பட்டன. இதன் மூலம் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, இழப்பீடு மசோதா ஆகிய 4 துணை மசோதாக்கள் உருவாக்கப்பட்டு அவற்றிற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.



இதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 12ம் தேதியுடன் நிறைவடைகிறது.

எனவே, நடப்பு கூட்டத்தொடரிலேயே ஜிஎஸ்டி துணை  மசோதாக்களை தாக்கல் செய்யவேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. வருகிற 29ம் தேதி அல்லது 30ம் தேதிக்குள் மக்களவையில் ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டால் பின்னர் மாநிலங்களவையில் இது  தாக்கல் செய்யப்படும்.

அப்போது தான் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திருத்தங்கள் அல்லது பரிந்துரைகள் செய்யப்பட்டால் அவற்றை மேற்கொள்வதற்கு  போதுமான அவகாசம் மத்திய அரசுக்கு கிடைக்கும்.

ஜிஎஸ்டி 4 துணை மசோதாக்களை இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

இதன் மீதான விவாதம் நாளையும் நாளை மறுதினமும் லோக்சபாவில் நடைபெறும் என தெரிகிறது. இதை தொடர்ந்து மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு  மாநிலங்களவையிலும் விவாதிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதை தொடர்ந்து அந்தந்த மாநிலங்களின்  சட்டப்பேரவைகளிலும் மாநில ஜிஎஸ்டி சட்டமாக  நிறைவேற்றப்படும்.

அதன் பின்னர் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சீரான வரி விதிப்பு வருகிற ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை