தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: லதாம், ராவல் அரை சதம்: கேன் வில்லியம்சன் சாதனை - வலுவான நிலையில் நியூசிலாந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: லதாம், ராவல் அரை சதம்: கேன் வில்லியம்சன் சாதனை  வலுவான நிலையில் நியூசிலாந்து

ஹாமில்டன்: நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக டிகாக் 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து வீரர் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்பின் முதல் இன்னிங்சை விளையாட தொடங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன் எடுத்திருந்தது. டாம் லதாம் 42, ஜீட் ராவல் 25 ரன்களுடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

ஸ்கோர் 83 ரன்களாக உயர்ந்தபோது, மோர்னே மோர்கல் பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து டாம் லதாம் ஆட்டமிழந்தார். அவர் 50 ரன்கள் எடுத்தார்.



அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன், ஜீட் ராவலுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர்.

68 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 200 ரன் எடுத்திருந்தது. கேன் வில்லியம்சன் 76, ஜீட் ராவல் 71 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ள நிலையில் நியூசிலாந்து இன்னும் 114 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. பிளாண்டர் வீசிய 63. 4வது ஓவரில் சிக்சர் விளாசிய கேன் வில்லியம்சன் டெஸ்ட் அரங்கில் 5,000 ரன்களை வேகமாக கடந்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அவர் 110 இன்னிங்சுகளில் 5,000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக மறைந்த மார்டின் குரோவ் 117 இன்னிங்சுகளில் 5,000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.


.

மூலக்கதை