ரபேல் நடால், நிஷிகோரி 4ம் சுற்றுக்கு முன்னேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரபேல் நடால், நிஷிகோரி 4ம் சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க்: மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று போட்டி ஒன்றில், 5ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்-ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கீரிபர் மோதினர்.

தனது 1000வது போட்டியான இதில், யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கத்தில் தடுமாறிய ரபேல் நடால், அதன் பின் உடனடியாக சுதாரித்து கொண்டு விளையாடினார். இறுதியில் 0-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 4ம் சுற்றுக்கு முன்னேறிய அவர், அந்த சுற்றில் பிரான்சின் நிக்கோலஸ் மகத்தை எதிர்கொள்ள உள்ளார். மயாமி ஓபனில் இதுவரை 4 முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள ரபேல் நடால், ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



ஆண்கள் ஒற்றையர் 3ம் சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில், 2ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி-25ம் நிலை வீரரான ஸ்பெயினின் பெர்ணாண்டோ வெர்டாஸ்கோவுடன் மோதினர். 2 மணி நேரம் மற்றும் 44 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், 7-6 (2), 6-7 (5), 6-1 என்ற செட் கணக்கில் நிஷிகோரி போராடி வெற்றி பெற்றார்.

4ம் சுற்றில் அவர், அர்ஜென்டினாவின் பெட்ரிகோ டெல்போனிஸை எதிர்கொள்ள உள்ளார். 4ம் சுற்றில் வெற்றி பெற்றால், காலிறுதிக்கு முன்னேற முடியும்.

மயாமி ஓபனை பொறுத்தவரை, கடைசி 3 ஆண்டுகளிலும் நிஷிகோரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பெட்ரிகோ டெல்போனிஸை வீழ்த்தினால், தொடர்ந்து 4வது ஆண்டாக அவர் காலிறுதிக்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று போட்டி ஒன்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர்-61ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸ் பலப்பரீட்சை நடத்தினர். இதில், 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்றார்.

4ம் சுற்றில் அவர் ஜப்பானின் ரிசா ஒசாகியுடன் மோதுகிறார். பிரிட்டன் வீராங்கனை ஜோஹன்னா கோண்டா, 6-4, 6-0 என்ற செட் கணக்கில், பிரான்சின் பவுலினா பார்மென்டியரை வீழ்த்தினார்.

இந்த போட்டி வெறும் 63 நிமிடங்களில் முடிவடைந்தது. 4ம் சுற்றில் ஜோஹண்ணா கோண்டா-ஸ்பெயின் வீராங்கனை லாரா அரூயபரீனா மோதுகின்றனர்.

இதேபோல் மற்றொரு போட்டியில் எஸ்டோனியாவின் அனீட் கோண்டாவெயிட்டை, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும், 4ம் சுற்றுக்கு முன்னேறினார்.

அந்த சுற்றில் அவர் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை எதிர்கொள்கிறார்.

.

மூலக்கதை