2.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலக்கு! இரு கட்டமாக வழங்க மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடு

தினமலர்  தினமலர்
2.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலக்கு! இரு கட்டமாக வழங்க மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 2.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோயினை தடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து போடும் பணிகள் 1995ம் ஆண்டு முதல் ஆண்டிற்கு இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போலியோ வைரஸ் தாக்குதல் வரக்கூடாது என்ற நோக்கத்தில் 22ம் ஆண்டாக வரும் ஏப்ரல் 2ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
அதன்படி கடலுார் மாவட்டத்தில் 5 வயதிற்குற்பட்ட 2 லட்சத்து 48 ஆயிரத்து 286 குழந்தைகளுக்கு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் இரு தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நாட்களில் போதுமான மருந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட அளவில் மேற்பார்வையாளர் மற்றும் மதிப்பீட்டாளர்களை நியமிக்கவும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சிகளுக்கு தேவையான தடுப்பு மருந்துகளை வழங்க சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் குறித்தும், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் காலையில் நடைபெறும் இறைவழிபாட்டின்போது மாணவ மாணவியர்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் பற்றி தெரியப்படுத்தி தங்கள் பகுதிகளில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதேபோன்று கல்லுாரி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தவும், போலியோ சொட்டு மருந்து வழங்குதல் குறித்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கவும், டாக்டர்கள் தங்களிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதன் அவசியத்தை எடுத்து கூற அறிவுறுத்தினர்.
மேலும், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மூலக்கதை