குற்றவாளிகளை பிடிக்க களம் இறங்கிய மக்களுக்குசபாஷ்:கேபிள் டி.வி., மூலம் கண்காணிக்கிறது 'கேமரா கண்'

தினமலர்  தினமலர்

மதுரை;மதுரை நகரில் திருட்டு, வழிப்பறி, கொள்ளையை தடுக்கும் வகையில் மாநகராட்சி 73 வது வார்டு லட்சுமிபுரம், கான்பாளையம் பகுதியில் கேபிள் டி.வி., மூலம் கண்காணிக்கும் வகையில் 60 கேமராக்கள் பொருத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.இப்பகுதியில் மூன்று மாதங்களில் திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, வீடுபுகுந்து கொள்ளை 42 சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி இழந்து இரவு துாக்கத்தை தொலைத்தனர்.
இதுகுறித்து போலீசாரிடம் புகார்கள் குவிந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டு சேவை சங்கத்துடன், போலீசார் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.போலீஸ் உதவி கமிஷனர் வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஆனந்தம், எஸ்.ஐ.,க்கள் ராமராஜன், ரமேஷ், சோமு, ரத்தினசாமி மற்றும் சங்க செயலாளர் தேசிகாசாரி, தலைவர் பாலயோகி, பாத்திர வியாபாரிகள் சங்க தலைவர் இம்மானுவேல், நிர்வாகிகள் குணசேகரன், மகேந்திரன் மற்றும் பல சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. இதுகுறித்து தேசிகாசாரி கூறியதாவது:மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். மேலும் 60 கேமராக்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு வீடும் அளிக்கும் பங்களிப்பு தொகை அதிகமாக இருப்பதால், வேறு ஒரு ஆலோசனை தெரிவித்தோம். ஒரு கண்காணிப்பு கேமரா 100 அடியில் நிகழும் சம்பவங்களை பதிவு செய்யும். இதன்படி இப்பகுதியில் திட்டமிட்டு 60 கேமராக்கள் பொருத்தி, கேபிள் டி.வி.,க்காக கட்டமைக்கப்பட்ட 'ஆப்டிகல் பைபர்' வழியாக கேபிள் டி.வி., அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சி 'மானிட்டரில்' பதிவுகளை கண்காணிப்பது என முடிவு செய்யப்பட்டது.இப்பதிவுகள் ஒன்றரை மாதம் வரை இருக்கும். ஒவ்வொரு 15 நாட்களின் பதிவை சி.டி.,யாக எடுத்து போலீசிடம் ஒப்படைக்கலாம். இவ்வாறு செய்தால் செலவு மிச்சம், என்ற ஆலோசனையை தெரிவித்தோம். இதை போலீசார் ஏற்றனர், என்றார்.
விரிவுபடுத்தலாம்: நகர் முழுவதும் கேபிள் டி.வி., ஆபரேட்டர்களுடன் இணைந்து இதுபோன்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் எளிதில் பிடிக்கலாம். லட்சுமிபுரம், கான்பாளையம் பகுதி மக்கள் முடிவை நகரின் பிற பகுதி மக்களும் பின்பற்றினால் குற்றவாளிகளுக்கு 'செக்' வைக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மூலக்கதை