மொபைல் சேவையை தொடர்ந்து அடுத்த அதிரடி: ஓட்டுனர் உரிமம் வாங்க ஆதார் கட்டாயம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: மொபைல் சேவையை தொடர்ந்து ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. மோசடிகள், முறைகேடுகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொது வினியோக திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் மொபைல் அல்லது தொலைபேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொபைல்போன் வாடிக்கையாளகர்கள் அடுத்த ஓராண்டுக்குள் ஆதார் இணைக்காவிட்டால் அவர்களது தொடர்பு துண்டிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதே போல் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள புதிய உத்தரவில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவது, புதுப்பிப்பது ஆகியவற்றிற்கும் ஆதார் அவசியம் என அதில் குறிப்பிட்டுள்ளது. போக்கு வரத்து குற்றங்கள், வாகன மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளையும் தடுக்கும் வகையில் இந்த ஆதார் இணைப்பு அவசியமாகிறது என்றும் அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை வருகிற அக்டோபர் முதல் முழுமையாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் தற்போது சுமார் 18 கோடி பேருக்கு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை