விவசாயியை சடலம் போல் படுக்க வைத்து ஒப்பாரி: தமிழக விவசாயிகள் போராட்டம் டெல்லியில் 13வது நாளாக நீடிப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 14ம் தேதி முதல் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலை, தழைகளை உடலில் கட்டிக்கொள்வது, மேலாடை அணியாமல், அங்கபிரதட்சணம் என தினம் ஒரு போராட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். 12வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது.இந்நிலையில் நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் நேற்றுமுன்தினம் டெல்லி சென்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசினர். 2வது நாளாக நேற்றும் அவர்கள் விவசாயிகளை சந்தித்தனர். அப்போது நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில், தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளும் வந்துள்ளதால் இவர்களின் குரல் நாடு முழுவதும் எட்டி உள்ளது. விவசாயிகள் தனி மரம் அல்ல. அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே மீண்டும் போராட்ட களத்துக்கு வந்துள்ளோம் என்றார். நடிகர் விஷால் கூறுகையில், தியேட்டர்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் கேட்க உள்ளேன். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுமாறு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து கேட்டுக்கொண்டோம் என்றார்.இதற்கிடையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் திருச்சியை சேர்ந்த அகிலன், ரமேஷ் ஆகியோர் திடீரென மரத்தில் ஏறி, தற்கொலை செய்யப்போவதாக அழுதபடி கூறினர். இதைப்பார்த்த நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் சுமார் அரை மணி நேரம் 2 பேரிடமும் சமாதானம் பேசினர். இதையடுத்து டெல்லி காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். அதற்குள் மரத்தில் ஏறிய 2 பேரும் கீழே இறங்கினர். இதைத்தொடர்ந்து, அய்யாக்கண்ணு உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலரை நாடாளுமன்ற காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று, அமைதி வழியில் போராட உங்களுக்கு அனுமதி உண்டு. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் 13வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. இன்று காலை ஒரு விவசாயியை பிணம் போல் படுக்க வைத்து, மாலை அணிவித்து, சங்கு ஊதி, சடலத்துக்கு செய்வது போல் இறுதி சடங்குகள் செய்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், தமிழகத்தில் விவசாயிகள் தினம் தினம் இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. அந்த அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவே இந்த போராட்டத்தை இன்று நடத்தினோம் என்றார். இந்நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ, இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுட்டுள்ள விவசாயிகளை சந்தித்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

மூலக்கதை