சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதனால் அவர்களது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்தது. இதை தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையை அடியொற்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அண்மையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஊதியமும் உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்திருந்தது.  இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.  தற்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரூ.1 லட்சம் ஊதியம் பெறுகிறார். தவிர இதர படிகள் உள்ளன. இதன் படி புதிய ஊதியம் ரூ.2.8 லட்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது தவிர அரசு வீடு, கார்கள், ஊழியர்கள், படிகள் ஆகியவையும் வழங்கப்படும். தற்போது ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை ரூ.2.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏறக்குறைய அமைச்சரவை செயலாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க புதிய பரிந்துரையின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது.3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் கமிட்டி அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்த போதிலும் புதிய உத்தரவின் மூலம் 200 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது. கமிட்டியின் பரிந்துரையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாகவும், இதர படிகளும் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதை ரூ.2.8 லட்சமாக நிர்ணயித்துள்ளது. இது செயலாளர்களை விட சற்று கூடுதல். மத்திய அரசின் இந்த சம்மதத்தை தொடர்ந்து விரைவில் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். பின்னர் பார்லியின் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை