அமெரிக்காவில் மகனுடன் இந்திய பெண் கொல்லப்பட்ட விவகாரம் : சர்வதேச நீதிமன்றம் மூலம் தீர்வு காண கோரிக்கை

தினகரன்  தினகரன்

அமெரிக்காவில் இந்திய பெண் பொறியாளர் மகனுடன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்று நாளுக்கு மேலாகியும் துப்பு துலங்காததால் மத்திய அரசு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த, ஆந்திராவை சேர்ந்த சசிகலா கடந்த வியாழக்கிழமை இரவு கொல்லப்பட்டார். அவரது 7 வயது மகனும் கொல்லப்பட்டான். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், கொலை சம்பவம் நடந்து 3 நாட்களாகியும் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசு சர்வதேச நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும் என சசிகலாவின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய சசிகலாவின் குடும்ப வழக்கறிஞர் ராகவராவ், சசிகலா கொலையின் பின்னணியில் சர்வதேச பிரச்சனைகள் உள்ளன. தனது கணவருக்கு அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்பதை சசிகலா ஏற்கனவே பெற்றோருடன் தெரியப்படுத்தி உள்ளார் என்றார். இதையும் ஆதாரமாக கொண்டு விசாரிக்க வேண்டும் என்றார். மேலும் மத்திய அரசு சர்வதேச நீதிமன்றம் மூலம் விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்விவகாரத்தில் மோடி அரசு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கணவர் ஹனுமந்த் ராவின் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளதாக ஏற்கனவே தெரிவித்த சசிகலா, இதில் தாம் கொல்லப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். ஏற்கனவே ட்ரம்ப் அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ள அமரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், சசிகலா கொலை விவகாரம் கூடுதல் அச்சத்தை உருவாக்கியுள்ளது.  

மூலக்கதை