ரூ.246 கோடி டிபாசிட்: திருச்செங்கோடு நபரிடம் விசாரணை

தினமலர்  தினமலர்
ரூ.246 கோடி டிபாசிட்: திருச்செங்கோடு நபரிடம் விசாரணை

சென்னை: ரூபாய் நோட்டு வாபசை தொடர்ந்து, ரூ.246 கோடி டிபாசிட் செய்த திருச்செங்கோட்டை சேர்ந்த நபர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிராமப்புறங்களில்..:

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த நவம்பர் 8 ம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை, புதுச்சேரியில் மட்டும் தனியார் நிறுவனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தனி நபர்கள் வஙகிகளில் ரூ.600 கோடிக்கும் மேல் டிபாசிட் செய்தனர். இதில் பெரும்பாலான பணம் கிராமப்புறங்களில் டிபாசிட் செய்யப்பட்டது. சென்னையில் கொஞ்சம் பணமும், புறநகர் பகுதிகள், நகரங்கள் ஒட்டிய பகுதிகளிலும் பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.

பிடி இறுகும்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒருவர், அரசு வங்கி கிளையில் ரூ.246 கோடி டிபாசிட் செய்துள்ளார். அவரை தொடர்ந்து 15 நாளுக்கு மேல் கண்காணித்தோம். அதில், அவர் கிராமப்புறத்தில் உள்ள வங்கி கிளையில் பணம் டிபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பணம் டிபாசிட் செய்ததை மறைக்க முயற்சி செய்தார். தொடர்ந்து விசாரணையில், பணம் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், பிரதமரின் கரீப் கல்யான் யோஜனா(பிஎம்ஜிகேஓய்) திட்டத்தில் இணையவும், டிபாசிட் செய்த பணத்தில் 45 சதவீதம் அபராதமாக கட்டவும் ஒப்புக்கொண்டார். அவர் பழைய ரூபாய் நோட்டுகளில் டிபாசிட் செய்துள்ளார். இதேபோல் கணக்கில் வராத பணத்தை டிபாசிட் செய்தவர்கள் பிஎம்ஜிகேஓய் திட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டனர். இந்த திட்டத்திற்கு இறுதி நாளான மார்ச் 31 க்குள் இந்த திட்டத்தில் இணைய ஏராளமானவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கணக்கில் வராத பணம் ரூ. ஆயிரம் கோடியை தாண்டும் என நம்புகிறோம். கணக்கில் வராத பணத்தை காட்டாதவர்கள் மீதான பிடி ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இறுகும்.

பதிலில்லை:

நாடு முழுவதும் 85 லட்சம் வங்கிக்கணக்குகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும்28 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இமெயில் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பலர் பதிலளித்த விட்டனர். இன்னும் சிலமுறை பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்கவில்லை. அவர்கள் அரசின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டால் 45 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். கணக்கில்வராத பணத்தை நாங்கள் கண்டுபிடித்தால் 83.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை