தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும்

திருவொற்றியூர்: தேர்தல் முறையாகவும் நேர்மையாகவும் நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். ஓபிஎஸ் அணி சார்பில் தலைமை தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கான பூமிபூஜை தண்டையார்பேட்டையில் இன்று காலை நடந்தது.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பூஜையை தொடங்கி வைத்து பேசியதாவது: ஆர். கே. நகர்  தொகுதியில் போட்டியிடும் மதுசூதனனை வெற்றிபெற செய்யவேண்டும் என்று மக்கள் முடிவு  செய்துவிட்டனர். அதை வாக்குகள் மூலம் நிரூபிப்பார்கள்.   தேர்தல் முறையாகவும் நேர்மையாகவும் நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.   எங்களது சின்னமான  இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கில் எம்ஜிஆரும் மற்றொரு விளக்கில் ஜெயலலிதாவும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த சின்னத்தை இன்று பிரகடனப்படுத்துகிறோம்.   எங்களுக்கு வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

நாளை தேர்தல் அறிக்கை வெளியீடு
ஓபிஎஸ் அணி சார்பில் தலைமை தேர்தல் அலுவலகம்  அமைப்பதற்கான பூமிபூஜை தண்டையார்பேட்டையில் இன்று காலை நடந்தது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் கே. பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மா. பா. பாண்டிய ராஜன், மைத்ரேயன் மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மா. பா. பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடத்தில் சொல்லி பிரசாரம் செய்வோம். தேர்தல் அதிகாரிகள் பண பட்டுவாடா போன்ற எவ்வித முறைகேடுகள் இல்லாமல் தேர்தலை முறையாக நடத்தவேண்டும்.

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் பணியாற்ற 50 மாவட்ட நிர்வாகிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் விழிப்புடன் பணியாற்றுவார்கள்.   108  வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும்’ என்றார்.

.

மூலக்கதை