பாதுகாப்பு ரேடார் வடிவமைத்து சாதனை தமிழக விஞ்ஞானிக்கு அக்னி விருது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாதுகாப்பு ரேடார் வடிவமைத்து சாதனை தமிழக விஞ்ஞானிக்கு அக்னி விருது

நெல்லை: நாட்டின் பாதுகாப்பிற்கான புதிய ரேடாரை வடிவமைத்து சாதனை படைத்த நெல்லை விஞ்ஞானிக்கு அக்னி விருது வழங்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்தவர் ஞானமிக்கேல் பிரகாசம். இவர், பெங்களூருவில் உள்ள டிஆர்ஓவில் எலக்ட்ரானிக்ஸ் ரேடார் மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பில் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்.

இவரது தலைமையிலான குழுவினர், 5 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பிற்கான ரேடார் வடிமைத்து வந்தனர். இதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு ரேடார் ஒப்படைக்கப்பட்டது.

இதனை பாதுகாப்புத்துறை சோதனை செய்து அதன் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரித்தது. இந்திய தொழில்நுட்பத்தில், இந்தியாவிலேயே வடிவமைத்து மேம்படுத்தப்பட்ட ஆரூத்ரா என்ற இந்த ரேடார் கடந்த குடியரசு தினத்தன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நடந்த விழாவில், நாட்டின் பாதுகாப்பிற்கான ரேடாரை வடிவமைத்த ஞானமிக்கேல் பிரகாசத்திற்கு அக்னி விருதை மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி வழங்கி பாராட்டினார்.

இந்த ரேடார் மூலம், இந்தியாவிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அன்னியச்செலாவணி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி விருது பெற்ற ஞானமிக்கேல் பிரகாசம், கீழப்பாவூர் ஆர்சி துவக்க பள்ளியில் ஆரம்பக்கல்வியும், பாவூர்சத்திரம் த. பி. சொக்கலால் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி வரை தமிழ் வழியில் பயின்றவர். ரேடார் ஆராய்ச்சி துறையில் 30க்கும் மேற்பட்ட உலகளாவிய ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சிஸ்டம் ஜெனரேட்டர் என்ற நூலை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். இவரது ஆராய்ச்சி முடிவுகள் நாட்டின் பாதுகாப்புத்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


.

மூலக்கதை