உத்தவ் தாக்கரேவை விருந்துக்கு அழைத்தார் மோடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தவ் தாக்கரேவை விருந்துக்கு அழைத்தார் மோடி

மும்பை: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை பிரதமர் மோடி விருந்துக்கு அழைத்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நவிஸ் தலைமையிலான பாஜ-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியிலும் சிவசேனா அங்கம் வகித்து வருகிறது.

இருந்த போதிலும் இரு கட்சிகளுக்கும் இடையே முட்டல்கள், மோதல் போக்குகள் நிலவி வருகின்றன. அண்மையில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு தங்களது பலத்தை காண்பித்தன.

இதில் மும்பை மாநகராட்சி மேயர் பதவியை சிவசேனாவுக்கு பாஜ விட்டு கொடுத்தது.

இந்த சூழலில் ஜனாதிபதி பிரணாப் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.
எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணியில் பாஜ தீவிரம் காட்டி வருகிறது.

அண்மையில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களை பாஜ கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பாஜ சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான சிவசேனாவுடன் ஆலோசிக்க பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதன் தலைவர் உத்தவ் தாக்கரேவை விருந்துக்கு அழைத்துள்ளதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் கூறுகையில், வருகிற 29ம் தேதி பாஜ கூட்டணியில் உள்ள தலைவர்களை விருந்துக்கு மோடி அழைத்துள்ளார். அப்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் மோடி, கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் என்றார்.

பாஜ தரப்பில் அத்வானி, சுமித்ரா மகாஜன், சுஷ்மா, ஜார்கண்ட் கவர்னர் திரவுபதி முர்மு ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.


மேலும் சிவசேனா தலைவர் கூறுகையில், லோக்சபா மற்றும் மாநிலங்களில் பெரும்பான்மை பலம் பாஜவுக்கு உள்ளது. இருந்த போதிலும் உத்தவ் தாக்கரேவை விருந்துக்கு மோடி அழைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது என்றார்.

பாஜ சிவசேனா உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மோடியின் இந்த அழைப்பு சிவசேனா தரப்பினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

.

மூலக்கதை