ஆர்.கே.நகரில் எத்தனை பேர் போட்டி? வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆர்.கே.நகரில் எத்தனை பேர் போட்டி? வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது

சென்னை: ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடைபெறுமா அல்லது வாக்கு இயந்திரம் மூலம் நடைபெறுமா என்பதும் நாளை மாலை தெரிய வரும் என்பதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான சென்னை ஆர். கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.   இந்த தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி. தினகரன், தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜ சார்பில் கங்கை அமரன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

இதைதொடர்ந்து உடனடியாக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கினர். அதிமுகவில் ஏற்பட்ட பிளவையடுத்து அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த தேர்தல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் இரு அணியில் யார் அதிக வாக்குகள் பெறுகின்றனரோ அவர்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் இரு அணிகளும் வெற்றி பெற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே வேட்புமனுதாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கி 23ம் தேதியுடன் முடிந்தது. கடைசிநாளில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டிடிவி. தினகரன், பாஜ சார்பில் கங்கை அமரன், தீபா உள்ளிட்ட 73 பேர்  வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மொத்தம் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் உட்பட 45 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் மருதுகணேஷ், மதுசூதனன், டிடிவி. தினகரன் உட்பட 82 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த நிைலயில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை வேட்பு மனுவை வாபஸ் பெறலாம்.

மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. மேலும், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படவுள்ளது.



தற்போது ஆர். கே. நகர் தொகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 82 பேரின் மனுக்களில் 12 பேர் மாற்று வேட்பாளர்கள்.

அவர்கள் நாளை தங்களது வேட்புமனுவை வாபஸ் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று மேலும் சிலரும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து ஆர்கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டியிடுகின்றனர் என்பது தெரியவரும். ஒரு தொகுதியில் 63 வேட்பாளர்களுக்கும் குறைவானவர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே தேர்தலின் போது வாக்குபதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியும்.

இல்லையெனில் வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்தப்படும். ஆர். கே. நகரில் தேர்தலில் போட்டியிட 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான நாளை மாலை 3 மணிக்குள் 19 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றால் மட்டுமே வாக்கு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெறும் சாத்தியம் உள்ளது. எனவே வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடைபெறுமா அல்லது வாக்கு இயந்திரம் மூலம் நடைபெறுமா என்பது நாளை மாலை 5 மணிக்குத்தான் தெரிய வரும் என்பதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


.

மூலக்கதை