மக்களுக்காக பாடுபடவே திமுக தொடங்கப்பட்டது

தமிழ் முரசு  தமிழ் முரசு
மக்களுக்காக பாடுபடவே திமுக தொடங்கப்பட்டது

சென்னை: க. திருநாவுக்கரசு எழுதிய ‘திமுக வரலாறு’ என்னும் நூலின் 3 தொகுப்புகள் வெளியீட்டு விழா நேற்று கலைஞர் அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.

திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் நூலை வெளியிட்டார். முதல் பிரதியை டி. ஆர். பாலு, பொன்முடி, எ. வ. வேலு பெற்றுக் கொண்டனர்.

விழாவில் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: இது திமுக வரலாறு மட்டுமல்ல, தமிழர் வரலாறு. திராவிட இனத்தின் வரலாறு.

எந்த இயக்கமும் கண்டிராத வகையில் வெற்றி கண்ட இயக்கம். இந்த இயக்கம் பல தியாகங்களையும் போராட்ட களங்களையும் கண்டது.

தங்களின் இயக்கத்துக்காக அர்ப்பணித்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதியும் அன்பழகனும் நமக்கு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். திராவிட இயக்க வரலாற்றில் 75 ஆண்டு காலம் பயணித்தவர்கள் அவர்கள்.

வயது முதிர்ந்த மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பார்கள். அதுபோல இவர்கள் வைரம் பாய்ந்த தலைவர்களாக இருக்கிறார்கள்.   இப்படிப்பட்ட திராவிட இயக்கமான திமுகவை அழிப்பதற்காக இன்று யார் யாரோ முயல்கிறார்கள்.



இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள். இந்த இயக்கம் அழிந்ததில்லை.

மதவாத சக்திகள், மதவாத எண்ணம் கொண்டவர்கள் இந்த இயக்கத்தை எப்படியாவது அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை அழிக்க முடியாது என்பது மட்டுமல்ல தொட்டு கூட பார்க்க முடியாது.

யார் யாரோ எங்கோ சென்று இன்று தியானம் செய்கிறார்கள். தியானம் என்றால் தவம்.

அர்ப்பணிப்போடு இருந்தால் தான் அது தவம். அந்த உணர்வோடு இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் 3 பாகத்திலும் 1948 முதல் 1958 வரை 10 ஆண்டு கால வரலாறு அடங்கியிருக்கிறது. அடுத்து 1968 வரை மேலும் 3 பாகங்கள் வெளிவர இருக்கிறது.

இப்படிப்பட்ட நெடிய வரலாறு வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லை. இந்த இயக்கம் மக்கள் நலனுக்காக உழைக்கும் இயக்கம்.

திராவிடர் கழக கொடி தயாரான போது சிவப்பு நிறத்திற்காக திமுக தலைவர் கருணாநிதி தனது கையில் குண்டூசியை குத்தி அந்த ரத்தத்தை சிவப்பு நிறமாக வைத்தார். அதேபோல கருப்பு சிவப்பு கொடியை அண்ணா அமைத்தார்.

கருப்பை இருள் என்றும், சிவப்பை ஒளி என்றும் விளக்கினார். 1949ல் தொடங்கப்பட்ட திமுக 1951ல் முதல் மாநில மாநாடு நடத்தியது.



அப்போதே வேலை இழந்த டிராம் தொழிலாளர்களுக்காக திமுக போராடியது. கைத்தறி நெசவாளர்களுக்கு இன்னல் வந்தபோது அண்ணாவும், கருணாநிதியும் மற்ற தலைவர்களும் தங்கள் தோளில் கைத்தறி துணியை சுமந்து சென்று விற்றனர்.   கருணாநிதியிடம், எம்ஜிஆர் ரூ. 250 தந்து கைத்தறி துணியை வாங்கினார்.

அது முதல் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. ஆட்சிக்கு வருவதற்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை.

மக்களுக்காக பாடுபடவே தொடங்கப்பட்டது. 1957ல் நடந்த மாநாட்டில் 59,942 பேர் திமுக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர்.

அதன்படி திமுக போட்டியிட்டு 15 எம்எல்ஏக்களும், 2 எம்பிக்களும் வெற்றி பெற்றனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றி அண்ணாவின் உணர்வை திமுக நிறைவேற்றி வருகிறது.

அது ஜல்லிக்கட்டாக இருந்தாலும், நெடுவாசலாக இருந்தாலும், ரேஷன் கடை முன் நடக்கும் போராட்டமானாலும் இப்படி பல சம்பவங்களை கூற முடியும். வருங்கால சந்ததியினர் தங்கள் மனதில் பதிய வைக்க இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஒவ்வொரு திமுகவினரும் தங்கள் இல்லத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். இயக்கத்துக்கு இந்த நூல் பெருமை சேர்த்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், ஆர். ராசா, சுப. வீரபாண்டியன் பேசினார்கள்.

க. திருநாவுக்கரசு நூல் அறிமுக உரையாற்றினார். தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு. சண்முகம் வரவேற்றார், டிகேஎஸ் இளங்கோவன் எம்பி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சிற்றரசு நன்றி கூறினார்.

.

மூலக்கதை