ஆர்.கே. நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ந்தேதி தேர்தல் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்

PARIS TAMIL  PARIS TAMIL
ஆர்.கே. நகர் தொகுதியில் ஏப்ரல் 12ந்தேதி தேர்தல் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நாளை இறுதி வேட்பாளர் பட்டியல்

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க-அம்மா), மதுசூதனன் (அ.தி.மு.க-புரட்சித்தலைவி அம்மா), மருதுகணேஷ் (தி.மு.க.), மதிவாணன் (தே.மு.தி.க.), கங்கை அமரன் (பா.ஜனதா), லோகநாதன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜெ.தீபா (எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை) உள்ளிட்ட 70 பேர் தாக்கல் செய்த 82 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர், தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது, களத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

அதிகாரிகளுக்கு பயிற்சி

வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டதால் அரசியல் கட்சியினர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 1,638 பேர் பங்கேற்றனர். தேர்தல் பொது பார்வையாளர் பிரவீன் பிரகாஷ், சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் ஆகியோர் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் கார்த்திகேயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

256 வாக்குச்சாவடிகள்

வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் வாக்குப்பதிவு நடக்கும் 256 வாக்குச்சாவடிகளில் பணியில் இருப்பார்கள். பொது பார்வையாளர் ஆலோசனையின்படி மேலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்த பயிற்சியில் பங்கேற்காத அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு அவர்கள் உண்மையான காரணங்களை தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. அவர்கள் அடுத்தகட்டமாக நடைபெற உள்ள பயிற்சிகளில் பங்கேற்க வேண்டும். பயிற்சிக்கு வராமல் இருந்து சரியான விளக்கம் அளிக்காதவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டுப்பதிவுக்கு வாக்குச்சீட்டா?

70 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன. மொத்தம் 82 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான 27-ந் தேதிதான் (நாளை) இறுதியாக எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது தெரியவரும்.

63 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த முடியாது. வாக்குச்சீட்டு முறையில்தான் ஓட்டுப்பதிவை நடத்தவேண்டும். எனவே ஓட்டுப்பதிவுக்கு மின்னணு எந்திரம் பயன்படுத்தப்படுமா? வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுமா? என்பது குறித்து 27-ந் தேதிதான் தெரியவரும்.

60 புகார்கள்

தேர்தல் விதிமுறை மீறல் நடந்ததாக 60 புகார்கள் வந்து உள்ளன. 7 லட்ச ரூபாய் ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் கண்காணிப்பு மேலும் அதிகரிக்கப்படும்.

வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன்படி வாக்காளர் ஓட்டுப்போட்டவுடன் மின்னணு எந்திரத்தின் அருகேயுள்ள எந்திரத்தில் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்று சின்னத்துடன் ஒப்புகை சீட்டு வெளியே வரும். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மேலும், தேர்தல் பணிகள் குறித்தும், வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரவீன் நாயர், கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் அமைக்கப்படும் 256 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? மத்திய பாதுகாப்பு படைகளை எவ்வாறு பணிக்கு அமர்த்துவது? வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்துவது, என்ன மாதிரியான தேர்தல் முன்னேற்பாடுகள் செய்வது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தினோம்.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு 2-வது கட்ட பயிற்சி ஏப்ரல் 3-ந் தேதியும், 3-வது கட்ட பயிற்சி ஏப்ரல் 8-ந் தேதியும் நடைபெற உள்ளது.

மத்திய பாதுகாப்பு படையினர்

இதுவரை வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி தொலைபேசி எண் 1913-க்கு தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் குற்றவாளிகள் பட்டியலை போலீசார் தயார் செய்து அவர்களை தேர்தல் நடப்பதற்கு முன்பு கைது செய்துவிடுவார்கள்.

ஆர்.கே.நகரில் 29 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளனர். எனவே வாக்காளர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15-ந் தேதி நடைபெறும். 63-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டு ஓட்டுப்பதிவு வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றால், தேர்தல் முடிவு வெளியாக தாமதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மூலக்கதை