டெல்லியில் போராட்டம் நீடிப்பு மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகள்

PARIS TAMIL  PARIS TAMIL
டெல்லியில் போராட்டம் நீடிப்பு மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகள்

டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது விவசாயிகள் இருவர் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சந்தித்து பேசிய நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ் ஆகியோர், விவசாயிகள் நலனுக்கு நிதி திரட்ட முடிவு செய்து இருப்பதாக கூறினார்கள்.
நூதன போராட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 14–ந் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு நாளும் அவர்கள் நூதன முறையில் போராடி வருகிறார்கள்.

நேற்றைய போராட்டத்தின் போது விவசாயி ஒருவர் பிணத்தைப் போல் ரோட்டில் படுத்துக் கிடக்க, ஒருவர் சங்கு ஊத, மற்றொருவர் சாவு மணி அடித்தார். பிணத்தைச் சுற்றி அமர்ந்திருந்த பிற விவசாயிகள் ஒப்பாரி வைத்து அழுதனர். துக்க வீடு போல அந்த போராட்டம் அமைந்திருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் கூடி நின்று இந்த நூதன போராட்டத்தை வேடிக்கை பார்த்தனர்.

இதற்கிடையே நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் நேற்று 2–வது நாளாக அங்கு வந்து போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணுவை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், இயற்கை மருத்துவ டாக்டர் திருத்தணிகாசலம் மற்றும் பாரதீய விவசாயிகள் சங்கத்தினர், டெல்லி மாணவர்கள், டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

நேற்றைய போராட்டத்தின் போது விவசாயிகள் 2 பேர் திடீரென அருகில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதைப் பார்த்து மற்ற விவசாயிகள் கூச்சல் போட்டனர். இதனால் அங்கு கூட்டம் கூடியது. அப்போது நடிகர் விஷாலும் மற்றவர்களும் கீழே இறங்கி வருமாறு அவர்களிடம் கெஞ்சினார்கள்.

இதற்கிடையே அங்கு தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தது. அதனைத்தொடர்ந்து விவசாயிகள் 2 பேரும் மரத்தில் இருந்து கீழே இறங்கினார்கள். உடனே அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்கொலை மிரட்டல் விடுத்த 2 பேரும் ஏற்கனவே கடந்த வாரமும் இதேபோல் மரத்தில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் துணை கமி‌ஷனர்கள் வி.கே.சிங், ராஜேந்திரபிரசாத் வர்மா, உதவி கமி‌ஷனர் வேத்புஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஆதரவு தெரிவித்த தே.மு.தி.க. வக்கீல் மணி உள்ளிட்ட சிலரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிற விவசாயிகள் போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர்.
அருண் ஜெட்லியுடன் நடிகர்கள் சந்திப்பு

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து பேசினார்கள். நேற்று அவர்கள் நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார்கள்.

பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய மந்திரிகளை சந்தித்தோம். எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சென்னை சென்று ஆலோசனை நடத்தித்தான் சொல்ல முடியும்.

தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு கஷ்டம் உள்ளது. விவசாயிகள் நலனுக்காக நிதி திரட்ட முடிவு செய்து இருக்கிறோம். பொதுமக்கள் டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்க்கிறார்கள். அதில் ஒரு ரூபாயோ அல்லது 10 ரூபாயோ பிடித்தம் செய்து விவசாயிகளின் நலனுக்காக கொடுக்க முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் காலில் விழுந்து கேட்கப் போகிறேன். அந்த பணத்தை எப்படி வசூல் செய்வது? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சென்னைக்கு சென்று பேசி முடிவு எடுப்போம்.

இவ்வாறு விஷால் கூறினார்.
பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:–

போராடும் விவசாயிகளின் குரலை கேட்க யாரும் தயாராக இல்லை. இது தமிழக விவசாயிகளின் போராட்டம் அல்ல, இந்திய விவசாயிகளின் போராட்டம். நிதி மந்திரியை நாங்கள் சந்தித்தபோது, எல்லா மந்திரிகளும் வழக்கமாக சொல்வதைப் போல, ‘பார்க்கிறோம்’ என்று சொன்னார். எங்களை மட்டுமே அவர் அழைத்திருந்ததால் விவசாயிகளை உடன் அழைத்துச் செல்லவில்லை.

விவசாயிகளின் போராட்டம் எவ்வளவு பெரிய போராட்டமாக மாறும் என்பதை காலம்தான் சொல்லும். தமிழ்நாடு அரசுக்கும் இது தொடர்பாக அழுத்தம் கொடுக்கப் போகிறோம். என்ன செய்ய போகிறோம்? என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

மூலக்கதை