வீட்டுக்கு ஒரு தங்கமகன்: இது பெரியவடகம்பட்டியின் வரலாறு

தினகரன்  தினகரன்

‘‘2016...செப்டம்பர் 10’’ இந்திய விளையாட்டுத் துறை பொன் எழுத்துக்களால் தனது பெருமையை பதிவு செய்த திருநாள்’’. பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டியில் தங்கவேலு மாரியப்பன் என்னும் நம்பிக்கை நாயகன், 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கத்தை தட்டிப்பறித்த அந்த நாளை, இந்தியர்கள் யாரும் எளிதில் மறக்க முடியாது. நிறைவுநாள் அணிவகுப்பில் தேசியக் கொடியுடன் தலைமை வகிக்கும் கவுரவம் மட்டுமல்ல, சமீபத்தில் மத்திய அரசின் பத்ம விருதும் மாரியப்பனை அலங்கரித்திருக்கிறது. இத்தகைய மகத்தான சாதனை படைக்க அவருக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது பெரியவடகம்பட்டி என்னும் குக்கிராமம். சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரின் மேற்கு பகுதி, டேனிஷ்பேட்டை ஊராட்சியில் அமைந்திருக்கிறது இந்த கிராமம். இங்குள்ள மக்களின் ஒரே மூலதனம் கடின உழைப்பு மட்டுமே. அவர்களின் குழந்தைகளோ… வறுமையை பொருட்படுத்தாமல் திறமையை நம்பி விளையாட்டுத்துறையில் சாதிக்கத் துடிக்கிறார்கள். அந்த வகையில் வீட்டுக்கு ஒரு விளையாட்டு வீரர் இங்கு உருவாகிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கான பயிற்சி மையம், பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் சிறிய மைதானம் மட்டுமே. ஆனால் பெருத்த நம்பிக்கையோடு பயிற்சி அளிக்கும் பிதாமகன், பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன். மாரியப்பனின் ஆர்வத்தை ஆரம்பத்தில் கண்டறிந்து சாதனைக்கு வித்திட்டவர். தற்போது செந்தில்குமார் என்ற மாற்றுத்திறன் மாணவருக்கு பயிற்சி அளித்து மாநில அளவிலான வட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் தங்கம் பெற வைத்துள்ளார். விரைவில் தேசிய போட்டிகளில் செந்தில்குமார் பங்கேற்க உள்ளார்.2ஆயிரம் பேர் வசிக்கும் ஊரில் 500க்கும் மேற்பட்டவர்கள் விளையாட்டு வீரர்கள் என்பது வேறு எந்த கிராமத்திற்கும் கிடைக்காத பெருமை. இந்த கிராமத்து கில்லிகள் விளையாட்டில் காட்டும் பாய்ச்சல், அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது. 15வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் படித்த காஞ்சேரி மாணவர் முருகன், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி ெபற்றார். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் காவல்துறையில் அவருக்கு பணி கிடைத்தது. தற்ேபாது தமிழக வருவாய்த்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தான், பெரியவடகம்பட்டியின் முதல் நம்பிக்கை விதை. இந்த ஊரைச் சேர்ந்த பொன்ராஜ், மாநில அளவில் பிரசித்தி பெற்ற கபடிவீரர். தற்போது சிறைத்துறையில் பணியாற்றி வருகிறார். அதிரூபன் மண்டல அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற்று தற்போது காவல் துறையில் பணியாற்றுகிறார். வாலிபால் போட்டியில் மண்டல அளவில் வெற்றி பெற்ற கார்த்திகேயன், நேபாள எல்லையில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றுகிறார். இவரைப் போலவே வாலிபால் விளையாட்டில் சாதித்த சக்திவேல், தற்போது வெற்றிகரமான தொழிலதிபராக விளங்குவதுடன், வடகம்பட்டி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கலைப்பிரியன் என்ற மாணவர், மண்டல அளவிலான நீளம் தாண்டுதலில் வென்று, மாநில போட்டிக்கு ேதர்வாகியுள்ளார். இப்படி… பயிற்சியாளர் ராஜேந்திரன் மெருகேற்றியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பணியை சத்தமில்லாமல் செய்து வருகிறது எங்கள் ெபரியவடகம்பட்டி. முயற்சியை மட்டுமே மூலதனமாக கொண்ட எங்கள் கிராமத்து மாணவர்களுக்கு, அரசு முறையான பயிற்சி அளித்தால், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்ற பாதை அமைப்போம் என்பது பெரியவடகம்பட்டி மக்களின் உறுதிமொழி.

மூலக்கதை