இலங்கை பயணம்: ரத்து செய்தார் ரஜினி

தினமலர்  தினமலர்
இலங்கை பயணம்: ரத்து செய்தார் ரஜினி

இலங்கை பயணத்தை ரத்து செய்த நடிகர் ரஜினி, 'நான் ஒரு கலைஞன் மட்டுமே; என்னை அரசியலாக்க வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், 2.0 படத்தை, 'லைக்கா' நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அங்கமான, ஞானம் அறக்கட்டளை சார்பில், இலங்கையில் உள்ள வவுனியாவில், 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகள், இலங்கை
தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான விழா, ஏப்., 9ல், இலங்கையில் நடக்க உள்ளது. இதில், ரஜினியும் பங்கேற்க இருந்தார். அவர் இலங்கை செல்ல, தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், தன் இலங்கை பயணத்தை, ரஜினி ரத்து செய்துள்ளார்.
அவரது அறிக்கை:
'லைக்கா' நிறுவன தலைவர் சுபாஷ்கரன், வீடுகளை இழந்த ஏழைகளுக்காக, 150 வீடுகளை கட்டியுள்ளார். அவற்றை, மக்களுக்கு வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்தார். அதில், மலேஷிய செனட் உறுப்பினர் விக்கேஸ்வரன், இலங்கை வடக்கு மாகாண முதல்வர்
விக்னேஷ்வரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, மரம் நடும் விழா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, புதுகுடியிருப்பு போன்ற இடங்களுக்கு சென்று, மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வீடுகளை திறந்து வைப்பது மற்றும் இலங்கை தமிழ் மக்களை சந்தித்து, புனிதப்போர் நிகழ்ந்த இடத்தில் சுவாசிப்பது என்ற காரணங்களுக்காக, விழாவில் பங்கேற்க நான் சம்மதித்தேன். இலங்கை தமிழர்களிடம் மனம் திறந்து பேச வேண்டும் என, எண்ணியிருந்தேன்.
அத்துடன், இலங்கை அதிபரை சந்தித்து, தமிழக மீனவர் பிரச்னையில், சுமூக தீர்வு காண பேச வேண்டும் என, எண்ணியிருந்தேன். இந்த நேரத்தில், திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர், பல அரசியல் காரணங்களை முன்வைத்து, நான் பங்கேற்கக் கூடாது என கேட்டனர்.
அவர்கள் கூறிய காரணங்களை, என்னால் முழுவதுமாக ஏற்க முடியவில்லை. இருந்தாலும், அவர்களின் வேண்டுகோளை ஏற்று, நான் இலங்கை விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்.
நான் அரசியல்வாதி அல்ல; கலைஞன் மட்டுமே. மக்களை மகிழ்விப்பது மட்டுமே என் கடமை. இனி வரும் காலங்களில், இலங்கை மண்ணை பார்க்கும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து, அதை அரசியலாக்கி, என்னை போக விடாமல் செய்து விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

மூலக்கதை