தர்மசாலாவில் இந்தியா அபார பந்துவீச்சு: ஆஸி. 300 ரன்னுக்கு ஆல்-அவுட்; அறிமுக வீரர் ‘சைனாமேன்’ குல்தீப் அசத்தல்

தினகரன்  தினகரன்

தர்மசாலா: தர்மசாலா டெஸ்டில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா முதல் நாளிலேயே 300 ரன்களுக்கு ஆல்  அவுட்டானது. அறிமுக வீரரான ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட்  அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன்  சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரை கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்புடன் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேசம்  தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. காயம் முழுமையாக குணமடையாததால் இப்போட்டியில் கேப்டன் கோஹ்லிக்கு பதிலாக அறிமுக  சுழல்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ரகானே கேப்டன் பொறுப்பை ஏற்றார்.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. உமேஷ் யாதவ் ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே ரென்ஷாவை (1) கிளீன்  போல்ட்டாக்கினார். அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்மித், வார்னர் அணியை மீட்டதுடன் விரைவாக ரன் சேர்த்தனர். 10 ஓவரில் ஆஸ்திரேலியா 52  ரன் சேர்த்தது. இச்சுற்றுப்பயணத்தில் அதிரடி வீரர் வார்னர் முதல் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியை அஷ்வின், ஜடேஜா சுழல்  கூட்டணியாலும் பிரிக்க முடியாத நிலையில், அறிமுக வீரர் குல்தீப் பந்துவீச அழைக்கப்பட்டார்.‘சைனாமேன்’ வகை இடது கை சுழல்பந்து வீச்சாளரான குல்தீப், அட்டகாசமாக பந்துவீசி வார்னர் (56) விக்கெட்டை வீழ்த்தியதுடன்  ஆஸ்திரேலியாவின் சரிவை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து ஹேண்ட்ஸ்கோம்ப் (8), அதிரடி வீரர் மேக்ஸ்வெல் (8) இருவரையும் கிளீன்  போல்ட்டாக்கினார் குல்தீப். ஷேன் மார்ஷ் (4) உமேஷ் யாதவ் வேகத்தில் வெளியேறினார். இதனால் 178 ரன்னுக்கு 5 விக்கெட் என ஆஸி.  தடுமாற்றம் கண்டது.ஒருமுனையில் போராடிய கேப்டன் ஸ்மித் டெஸ்ட் அரங்கில் தனது 20வது சதத்தையும், இத்தொடரில் 3வது சதத்தையும் பூர்த்தி செய்து  அசத்தினார். ஸ்மித் 111 ரன் எடுத்திருந்த நிலையில், அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாடே (57) ஓரளவுக்கு தாக்குபிடித்து  அரைசதம் அடித்து ஜடேஜா பந்தில் வெளியேறினார். கம்மின்ஸ் (21) குல்தீப் பந்திலும், லியான் (13) புவனேஸ்வர் வேகத்திலும் வெளியேற,  ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசிய குல்தீப் சிங் 4  விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 1 ஓவருக்கு ரன், விக்கெட் ஏதுமின்றி உள்ளது.  ஆஸ்திரேலியாவை ஒரே நாளில் சுருட்டியதன் மூலம் இப்போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் ஆரம்பமாகி உள்ளது.

மூலக்கதை