யார் இந்த குல்தீப்?

தினகரன்  தினகரன்

ஆஸ்திரேலியாவையே ஆட்டம் காண வைத்த ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 22 வயதாகும் இவர்  288வது வீரராக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த குல்தீப் யாதவ் ஆரம்பத்தில் வேகப்பந்து  வீச்சாளராக இருந்துள்ளார். அவரது பயிற்சியாளரின் வற்புறுத்ததால், இடதுகை ‘சைனாமேன்’ சுழல்பந்துவீச்சாளராக மாறியிருக்கிறார்.  வித்தியாசமான இந்த பந்துவீச்சு முறையால் முதலில் கஷ்டப்பட்டாலும் பின்னர் தனது திறமையை வளர்த்துக் கொண்டார் குல்தீப். 82 ஆண்டுகால இந்திய அணி வரலாற்றில் ‘சைனாமேன்’ இடது கை சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மட்டுமே. 2014ல் யு-19 உலகக்  கோப்பை தொடரில் 6 போட்டியில் ஹாட்ரிக் உட்பட 14 விக்கெட் வீழ்த்தியுள்ளார். யு-19 கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் சாதனை  படைத்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.ஐபிஎல்லில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த இவர் தற்போது கொல்கத்தா அணியில் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 23 ஓவர் வீசிய  குல்தீப் 3 மெய்டன் உட்பட 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவரது பந்துவீச்சை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டிவிட்டரில்  வெகுவாக பாராட்டியுள்ளார். ‘குல்தீப்பின் பந்துவீச்சும், அவர் தன் டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்த விதமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.  தொடர்ந்து அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். குல்தீப், இது நீங்கள் பிரகாசிக்கும் போட்டியாக இருக்க வேண்டும்’ என சச்சின் வாழ்த்து  கூறி உள்ளார். பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் அசத்துவாராம் குல்தீப். 22 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள குல்தீப் 1 சதம், 5  அரைசதம் உட்பட 723 ரன் சேர்த்துள்ளார்.

மூலக்கதை