தியோதர் டிராபி: இந்தியா ‘பி’ வெற்றி

தினகரன்  தினகரன்

விசாகப்பட்டினம்: தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், ஷிகார் தவான் அதிரடி சதத்தில் இந்தியா ‘பி’ அணி 23 ரன்  வித்தியாசத்தில் இந்தியா ‘ஏ’ அணியை வென்றது. இந்தியா ஏ, பி மற்றும் விஜய் ஹசாரே தொடரில் கோப்பை வென்ற தமிழகம் ஆகிய 3  அணிகள் மோதும் தியோதர் டிராபி முதல் தர ஒருநாள் கிரிக்கெட் தொடர் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு அணியும்  மற்றொரு அணியுடன் ஒரு லீக் போட்டியில் மோதும். இந்தியா ஏ, பி அணிகளுக்கு இடையேயான முதல் லீக் போட்டி விசாகப்பட்டினத்தில்  நேற்று நடந்தது.முதலில் பேட் செய்த இந்தியா ‘பி’ அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகார் தவான் 127 ரன்  (122 பந்து), பார்த்தீவ் படேல் 50 ரன் (48 பந்து) விளாசினர். இந்தியா ஏ பந்துவீச்சாளர் சித்தார்த்த கவுல் சிறப்பாக பந்து வீசி 10 ஓவரில் 59 ரன்  கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 48.2 ஓவரில் 304 ரன் எடுத்து 23 ரன் வித்தியாசத்தில் தோல்வி  அடைந்தது. அதிகபட்சமாக அம்பாதி ராயுடு 92 ரன் எடுத்தார். பந்துவீச்சில் குல்கர்னி, கர்னீவர் தலா 3 விக்கெட், அக்சர் படேல்,  கெஜோரோலியா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதில், குல்கர்னி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தது  குறிப்பிடத்தக்கது. இன்று நடக்கும் போட்டியில் இந்தியா பி, தமிழகம் அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை