தமிழர் பிரச்சினை தீர்ந்தபின் ரஜினி இலங்கை வந்தால் நன்றாக இருக்கும்! - சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழர் பிரச்சினை தீர்ந்தபின் ரஜினி இலங்கை வந்தால் நன்றாக இருக்கும்!  சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணம்: தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்து தீர்ந்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் மேற்கொண்டால் நல்லது என ஈபி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தொடர் போராட்டங்களை பல்வேறு இடங்களில் முன்னெடுத்துள்ள நிலையில், 150 வீடுகளை கையளிப்பதற்காக மட்டும் ரஜினி வர வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில், காணாமல் போனவர்களை மீட்டுத் தருமாறு போராட்டங்கள் தொடர்கின்றன, நில மீட்புப் போராட்டங்களும் தொடர்கின்றன.

இந்தப் போராட்டங்கள் மாதக் கணக்காகக் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், சில வீடுகளை மட்டும் கையளிப்பதற்கு ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் வர வேண்டுமா? என்கிற கேள்வி எழுகின்றது.

இந்தியத் தேசிய அரசியலில் ரஜினிகாந்த் முக்கியமான நபர். அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியோடு நெருக்கம் உண்டு. அவ்வாறான நிலையில், அவர், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க முடியும். அதனை அவர் செய்வாராக இருந்தால் அது, தமிழ் மக்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

மாறாக, லைகா நிறுவனம் கட்டியுள்ள வீடுகளைக் கையளிப்பதற்காக மட்டும் வருவது அவ்வளவு முக்கியமான ஒன்றல்ல.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்ததன் பின்னர், அவர் வருகை தருவாரேயானால், அவரை வரவேற்பதில் பிரச்சினையில்லை. இருப்பினும் நாங்கள் அவருக்கு எதிரானவர்கள் அல்ல," என்று அவர் கூறியுள்ளார்.

தனது இலங்கைப் பயணத்தின் போது போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களையும் ரஜினி பார்ப்பார் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை