பிரசாரத்தின்போது நலச்சங்கங்களை புறக்கணிக்கும் டிடிவி.தினகரன் - சசிகலா அணியினர் விரக்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரசாரத்தின்போது நலச்சங்கங்களை புறக்கணிக்கும் டிடிவி.தினகரன்  சசிகலா அணியினர் விரக்தி

திருவொற்றியூர்- தேர்தல் பிரசாரத்தின்போது நலச்சங்க நிர்வாகிகளை டிடிவி. தினகரன் புறக்கணிப்பதால் சசிகலா அணி தரப்பினர் கடும் விரக்தியில் உள்ளனர்.

சென்னை ஆர். கே. நகர் தொகுதியில் திமுக, அதிமுக அணியினர் பாஜ, தேமுதிக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக இரண்டாக உடைந்ததால் அந்த கட்சி சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது.

இதனால் சசிகலா அணி வேட்பாளர் டிடிவி. தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து, தொப்பியை அணிந்தபடி டிடிவி. தினகரன் பிரசாரத்தை துவங்கினார்.

தண்டையார்பேட்டை, நேதாஜி நகரில் நேற்று டிடிவி. தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இன்றும் ஆர். கே. நகர் தொகுதியில் டிடிவி. தினகரன் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஆர். கே. நகரில் முஸ்லிம் அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொது நல அமைப்புகள், பல்வேறு வியாபாரிகள் மற்றும் சமூகநலப் பேரவை, இளைஞர் பேரவை என ஏராளமானவை உள்ளன.

இந்த அமைப்பின் நிர்வாகிகளை திமுக வேட்பாளர் மருதுகணேஷ், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், ஆகியோர் சந்தித்து ஆதரவு திரட்டினர். இதுபோல் பாஜ வேட்பாளர் கங்கை அமரனும் அந்த அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

ஆனால், இன்றுவரை அவர்களை தினகரன் சந்தித்து ஆதரவு கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.   இப்படி பிரசாரம் செய்தால் எப்படி வெற்றிப்பெற முடியும்? என்று சசிகலா அணி தரப்பினர் கடும் விரக்தியில் உள்ளதாக தெரிகிறது.

.

மூலக்கதை