ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வடகாடு போராட்டமும் வாபஸ்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வடகாடு போராட்டமும் வாபஸ்?

ஆலங்குடி- புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் 15-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு உட்பட அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி நெடுவாசல் போராட்டக்காரர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தனர். ஆனால் நல்லாண்டார்கொல்லை மற்றும் வடகாட்டில் போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில் நேற்று வடகாட்டில் 20வது நாளாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், பெண்களும் கருப்புக்கொடி ஏந்தி அமைதி பேரணியாக சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டக்களத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்.

கொடூரமான வெயிலிலும் அவர்கள் பந்தலில் அமர்ந்து உண்ணாவிரதத்துடன் கோரிக்கைகளை முழங்கியபடி இருந்தனர்.
நேற்று மாலை மாங்குடிபட்டியை சேர்ந்த குஞ்சம்மாள்(60), மீனாள்(70), சுமித்ரா(27), கலா(45), கள்ளிக்கொல்லையை சேர்ந்த சரஸ்வதி(70) ஆகிய 5 பெண்களும் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டதுஅவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நல்லாண்டாரில் வாபஸ் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லாண்டார் கொல்லையில் நேற்று 37வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   போராட்டக்குழுவினருடன் நேற்று மாலை 6 மணியளவில் புதுக்கோட்டை சப். கலெக்டர் அம்ரித் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்கள் கலெக்டர் வந்து எங்களுக்கு உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

இதையடுத்து கலெக்டர் கணேஷ் இரவு 8. 30 மணியளவில் நல்லாண்டார்கொல்லைக்கு வந்தார்.

அப்போது நல்லாண்டார்கொல்லை மற்றும் சுற்றுப்புறபகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி தரப்படமாட்டாது என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பொதுமக்கள் அறிவித்தனர். எனவே இன்று நல்லாண்டார்கொல்லையில் மக்கள் போராட்டம் நடைபெறவில்லை.

அதே நேரத்தில் வடகாட்டில் நேற்று விடிய விடிய மக்கள் போராட்ட களத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்நிலையில் போராட்ட குழுவினர் நல்லாண்டார்கொல்லை மக்கள் போல போராட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்று 21வது நாளான இன்று போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தலாமா என்பது குறித்து போராட்ட குழுவினர் களத்தில் கூடி ஆலோசிக்கின்றனர். இதில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலங்குடி மெய்யநாதன் எம். எல். ஏவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

புதுகை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் வரை போராட்டம் ஓயாது. இதற்காக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல் தலைவர் மு. க.

ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். நானும் அதில் பேசினேன்.

ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை உத்தரவாதம் வரவில்லை. அதே நேரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கர்நாடக தனியார் நிறுவனம், புதுகை கலெக்டருக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்து உள்ளது.

அதற்கான கட்டணத்தையும் அனுப்பி உள்ளது. கலெக்டர் அதனை நிராகரிக்க வேண்டும்.

இன்று போராட்ட களத்தில் மக்களுடன் கலந்து பேசுகிறோம். அதில் மக்கள் நலன் கருதியும், எதிர்கால தமிழகத்தின் நலன் கருதியும் முக்கிய முடிவு எடுக்கப்படும்.

எந்த நிலையிலும் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை