ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 82 மனுக்கள் ஏற்பு: 45 மனுக்கள் தள்ளுபடி 27ம் தேதி இறுதிப்பட்டியல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 82 மனுக்கள் ஏற்பு: 45 மனுக்கள் தள்ளுபடி 27ம் தேதி இறுதிப்பட்டியல்

சென்னை- ஜெயலலிதா மறைவால் காலியான, ஆர். கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது.   அதிமுக மூன்றாக உடைந்துள்ளதால், ஆர். கே. நகரில் பலமுனை போட்டி உருவாகி உள்ளது.

திமுக சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணி சார்பில் டிடிவி. தினகரன், பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர். இதுதவிர, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மற்றும் தேமுதிக, மார்க்சிஸ்ட், பாஜ உள்ளிட்ட கட்சிகளும் ஆர். கே. நகரில் போட்டியிடுகின்றன.

மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவை முடக்குவதாக கடந்த 22ம் தேதி இரவு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

அதிமுகவின் இரு அணியில் யார் அதிக வாக்குகள் பெறுகின்றனரோ அவர்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், இரு அணிகளும் அதிக வாக்குகள் பெற முனைப்புடன் செயல்படுகின்றன.



இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக முடக்கப்பட்டதால், புதிய கட்சி பெயர் மற்றும் சின்னத்துடன் ஓபிஎஸ் அணி மதுசூதனன், சசிகலா அணி டிடிவி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முன்தினம், பாஜ வேட்பாளர் கங்கை அமரன், தீபா உள்ளிட்ட 73 பேர் மனுதாக்கல் செய்தனர்.

மொத்தம் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆர். கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் மனுக்களை பரிசீலனை செய்தார்.

அப்போது, திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அவரது சார்பில் வக்கீல் கிரிராஜன், டிடிவி. தினகரன் சார்பில் தளவாய் சுந்தரம், எம்பி நவநீதகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மதுசூதனன் சார்பில் திருமாறன், தேமுதிக வேட்பாளர் மதிவாணன், பாஜ வேட்பாளர் கங்கை அமரன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வந்திருந்தனர். தீபா சார்பில் அவரது  வக்கீல்கள் மட்டும் வந்திருந்தனர்.


 மதியம் 12. 30 மணியளவில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனு ஏற்கப்பட்டது. தொடர்ந்து, கங்கை அமரன், மதுசூதனன் மனு ஏற்று கொள்ளப்பட்டது.

சுமார் 2. 30 மணியளவில் டிடிவி. தினகரன் மனுவை பரிசீலனை செய்ய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் எடுத்தார்.

 

அப்போது, திமுக சார்பில் ‘டிடிவி. தினகரன் அன்னிய செலாவணி வழக்கில் ரூ. 28 கோடி அபராதம் விதித்து செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ. 54 லட்சம் என கூறியுள்ளார். இவரால் எப்படி ரூ. 28 கோடி அபராதம் செலுத்த முடியும்.

இவரை திவாலானவராகவே கருத வேண்டும். நீதிமன்றத்தில் சிங்கப்பூர் குடிமகன் என கூறிவிட்டு, தற்போது இங்கு மனுதாக்கல் செய்துள்ளார்.

எனவே இவருடைய மனு ஏற்று கொள்ள கூடாது’ என கூறி 5 பக்க புகார் மனுவை பிரவீன் நாயரிடம் கொடுத்தனர்.
அப்போது, டிடிவி. தினகரன் சார்பில் வந்திருந்த தளவாய் சுந்தரம், நவநீதகிருஷ்ணன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வேட்பு மனு ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதற்கு, திமுகவினர், ‘டிடிவி. தினகரன் வேட்பு மனுவை ஏற்று கொண்டால், தேர்தல் விதியை மீறிய செயல். காலையில் இருந்து பல வேட்பாளர்களின் மனுக்களில், ஆவணங்கள் சரியில்லை என கூறி தள்ளுபடி செய்துள்ளீர்கள்.

அப்படியென்றால் அவர்களுக்கு ஒரு சட்டம், தினகரனுக்கு ஒரு சட்டமா?. ஆளுங்கட்சி வேட்பாளர் என்பதால் அவருக்கு சாதகமாக நடந்து கொள்ள கூடாது.

சட்டப்படி, நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்’ என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

திமுகவினரின் கடும் வாக்குவாதத்தால் தேர்தல் அதிகாரி பீரவின் நாயர் மற்றும் உடனிருந்த அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர்.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேர வாக்குவாதத்திற்கு பின், தினகரன் மனு ஏற்கப்பட்டதாக பிரவீன் நாயர் அறிவித்தார்.

இதனால், அதிருப்தியடைந்த திமுகவினர், சட்டவிதிகளுக்கு புறம்பாக நடந்து கொள்கிறீர்கள் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து வெளியேறினர். கணவர் இல்லை என வேட்புமனுவில் கூறப்பட்டு இருந்ததால், தீபாவின் மனு நீண்ட இழுபறிக்கு பின் ஏற்று கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு ஜல்லிகட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் காமேஸ்வரன் மனுவை ஆவணங்கள் இல்லை என கூறி தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

உடனே, வேட்பாளர் காமேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேட்பாளர் காமேஸ்வரன் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்தோணி சேவியர் மனுவையும் நிராகரித்தனர். இதன்பிறகு, தேர்தல் அதிகாரி கூடுதல் ஆவணங்கள் கேட்டார்.

அதை கொடுத்தும் கூட மனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார். இதை கண்டித்தும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் சாலை மறியல் செய்தனர்.

அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் எம். தினகரன் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருந்தார்.
இவருடைய மனுவை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.

அப்போது, டிடிவி. தினகரன் சார்பில் போடப்பட்ட டம்மி வேட்பாளருக்கு ஆதரவாக வந்த பாலமுருகன் என்பவர், தினகரன் ஆவணங்களில் கொடுக்கப்பட்ட சாட்சிகளில் பெயர் சரியில்லை. அதனால், அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

உடனே, மீண்டும் தேர்தல் அதிகாரி அந்த மனுவை ஆய்வு செய்து மனுவை நிராகரித்தார்.

அப்போது, சுயேச்சை வேட்பாளர் தினகரன், நீங்கள் டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக என்னுடைய மனுவை தள்ளுபடி செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், எம். தினகரன் மற்றும் உடன் வந்தவர்களை வெளியேற்றினர்.

இதேபோல், இந்து மக்கள் கட்சி வேட்பாளர் ராம. ரவிக்குமார் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சுயேச்சைகள் மனுக்கள் அடுத்தடுத்து ஏற்கப்பட்டது.

மொத்த 127 மனுக்களில் 82 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 45 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனு வாபஸ் வாங்க 27ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.

தொடர்ந்து ஏப்ரல் 12ம் தேதி ஆர். கே. நகரில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

.

மூலக்கதை