நாளை மறுநாள் தீபா பிரசாரம் - தேர்தல் அறிக்கை வெளியிடவும் திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை மறுநாள் தீபா பிரசாரம்  தேர்தல் அறிக்கை வெளியிடவும் திட்டம்

சென்னை- சென்னை ஆர். கே. நகர் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக இந்த தேர்தலில் மூன்று அணிகளாக களம் காண்கிறது.

இதன்படி சசிகலா, ஓபிஎஸ், தீபா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களை திரட்டி தேர்தலை சந்திக்கின்றனர். தீபாவை பொறுத்தவரை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

அன்று முதல் ஆர். கே. நகரில் நான் போட்டிடுவேன் என தீபா கூறி வந்தார். அதன்படி, தற்போது தீபா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், தீபா மனுத்தாக்கல் செய்ததில் இருந்து மனு பரிசீலனை முடியும் வரை பெரும் பரபரப்பு நீடித்தது. அதாவது அவரது மனு தள்ளுபடியாகும் என்றுகூட பரபரப்பாக பேசப்பட்டது.

ஏற்கனவே, ஆர். கே. நகரில் நான் போட்டியிடக்கூடாது என்பதற்காக சசிகலா குடும்பத்தினர் தன்னை கூலிப்படை ஏவி மிரட்டுவதாக தீபா குற்றம்சாட்டினார்.

எனவே, இந்த மனு தள்ளுபடி தகவலுக்கு பின்னால் பெரிய சதி இருக்கலாம் என தீபா எண்ணினார். இதையடுத்து தன் வக்கீல் குழுவை தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி, சந்தேகப்படும்படியான தகவலுக்கு முழு விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்டார்.

நீண்ட நேர பரபரப்புக்கு பிறகு நேற்று மாலை தீபாவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து தீபாவுக்கு எந்த சின்னம் கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



படகு, பேனா, திராட்சை கொத்து, மெழுகுவர்த்தி உள்ளிட்ட சின்னங்களில் ஏதாவது ஒன்றை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தீபா கோரிக்கை வைத்தார். அவருக்கு வரும் 27ம் தேதி அன்று சின்னம் வழங்கப்படுகிறது.

சின்னம் கிடைத்தவுடன் தீபா, ஆர். கே. நகரில் பிரசாரம் தொடங்க உள்ளதாக பேரவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அன்றைய தினம் தனது வீட்டில் ஆர். கே. நகர் தேர்தல் அறிக்கையையும் தீபா வெளியிடுகிறார். அதில், இளைஞர்கள், பெண்கள், மாணவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவின் திடீர் சுறுசுறுப்பு காரணமாக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

.

மூலக்கதை