திமுக புகார் எதிரொலி: சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றம்: புதிய கமிஷனராக கரன்சின்கா நியமனம் - தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திமுக புகார் எதிரொலி: சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றம்: புதிய கமிஷனராக கரன்சின்கா நியமனம்  தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை- சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் நேற்று இரவு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டது. புதிய கமிஷனராக சிபிசிஐடி ஏடிஜிபி கரன்சின்கா நியமிக்கப்படுகிறார்.

சென்னை ஆர். கே. நகரில் வருகிற ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி பிறப்பித்தது.

அறிவிப்பு செய்த அன்றே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆர். கே. நகர் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆர். கே. நகர் தேர்தல் அதிகாரி பத்மஜாதேவி, கடந்த பொதுத் தேர்தலில் இந்த தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது தேர்தல் அதிகாரியாக இருந்தார். அப்போதே அவர், ஆளும்கட்சியின் முறைகேட்டுக்கு உதவி செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், ஆர். கே. நகர் இடைதேர்தலிலும் பத்மஜாதேவி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதனால் அவரை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்தது. இந்தப் புகாரைத் தொடர்ந்து அவரை உடனடியாக மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.   ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் பி. நாயர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கடந்த முறை பொதுத் தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்ததால் மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததால், ஜார்ஜ் மீண்டும் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் ஆளும் கட்சி இரண்டாக உடைந்த பிறகு, அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையில் இருந்து கூவத்தூருக்கு கடத்திச் செல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்தப் புகார் மீது கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கள் அப்போது எழுந்தன.

இதனால், ஆர். கே. நகர் இடைதேர்தலில், அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்.

எனவே அவரை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து உடனடியாக மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்தது. இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

அதைத் தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற முடிவு செய்துள்ளதால், புதிய போலீஸ் கமிஷனரை நியமிப்பதற்காக 3 போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. அவரும், தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள கரன்சின்கா(சிபிசிஐடி), அசுதோஷ் சுக்லா(மதுவிலக்கு), திரிபாதி(சட்டம் ஒழுங்கு) ஆகியோரது பெயர்களை அனுப்பினார்.

அதில் திரிபாதி கடந்த பொதுத் தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால், அப்போதே மாற்றப்பட்டவர். இதனால், அவரது பெயரை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

அசுதோஷ் சுக்லா, கரன்சின்கா ஆகியோரில் யாரை நியமிப்பது என்று ஆலோசனை நடத்தினர்.

இரண்டு அதிகாரிகளுமே நேர்மையானவர்கள், திறமையானவர்கள். அதில், அசுதோஷ் சுக்லா கடந்த பொதுத் தேர்தலின்போது ஜார்ஜ் மாற்றப்பட்ட பிறகு, போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டவர்.

இந்த முறை நேர்மையான அதிகாரி கரன்சின்காவை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று இரவு அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு அனுப்பினார். அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவுக்காக அனுப்பியுள்ளார்.

முதல்வரின் அனுமதி கிடைத்தவுடன், முறைப்படி அரசாணை பிறப்பிக்கப்படும் என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடியாக மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரைத் தொடர்ந்து ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சென்னை மாநகர உளவுத்துறை உயர் அதிகாரிகள் சிலர் மாற்றம் செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை