சின்னத்தை கோட்டை விட்டதால் சிறையில் கொந்தளித்த சசிகலா: டிடிவி தினகரனுக்கு டோஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சின்னத்தை கோட்டை விட்டதால் சிறையில் கொந்தளித்த சசிகலா: டிடிவி தினகரனுக்கு டோஸ்

சென்னை- இரட்டை இலை சின்னத்தை கோட்டை விட்டதுடன் பலரும் கிண்டல் செய்யும் வகையில் தொப்பி சின்னத்தை தேர்வு செய்ததற்கு  சிறையில் இருக்கும் சசிகலா தனது உறவினர்களிடம், ‘தினகரன் பொறுப்பாக இல்லையே’ என்று கொந்தளித்திருக்கிறார். அதிமுக சசி அணி, பன்னீர் அணி என 2 ஆக பிரிந்தது முதலே இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடின.

முதலில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த பன்னீர் அணி, சில நாட்களில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும் மனு அளித்தது. அதனால் சசி அணியும் வேறு வழியில்லாமல் இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான் என்று தேர்தல் ஆணையத்திடம் ஆதாரங்களை சமர்பிக்க வேண்டியதாகியது.

இந்நிலையில் சசிகலா சிறைக்கு போக தினகரன் கட்டுப்பாட்டில் சசி அணி வந்தது. துணை பொதுச் செயலாளரான  தினகரன் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பதில் காட்டிய வேகத்தை சின்னத்தை கைப்பற்றுவதில் காட்டவில்லை.

சின்னம் யாருக்கு என்று தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையின் போது பிரபல வக்கீல்களை வைத்து சசி அணி வாதாடியும் பலனில்லை.

எல்லோரும் எதிர்பார்த்தது போல் முடக்கப்பட்டதுதான் மிச்சம். இது சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனை சந்தித்தவர்களிடம் வெளிப்படையாகவே சசிகலா தெரிவித்துள்ளார். ‘ஏற்கனவே தினகரனை இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை.

இப்போது இரட்டை இலை சின்னம் இல்லாமல் போட்டியிட்டால் எப்படி’ என்று கோபப்பட்டுள்ளார். இந்நிலையில் கட்சியின் பெயரும் போய், சின்னமும் போய் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல்.

அதுமட்டுமல்ல மாற்று சின்னம் உருப்படியாக தேர்ந்தெடுக்கவில்லை என்பதும் சசிகலாவை கோபப்படுத்தியுள்ளது. இளவரசியின் மகன் விவேக் நேற்று  பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது சின்னம் தேர்ந்தெடுத்த விவகாரம் குறித்து சசிகலா கொந்தளித்துள்ளார்.

சின்னத்திற்கான விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தப்போகிறது என்று தெரியவந்ததும், சின்னத்திற்கு ஆபத்து என்று தெரிந்திருக்க வேண்டாமா. மாற்று சின்னத்தை தேர்ந்தெடுப்பதில் கவனம் காட்டியிருக்க வேண்டாமா, தேர்தல் ஆணையத்திடம் நூற்றுக்கணக்கான சின்னங்கள் இருக்கும் போது அதில் இருந்து மக்களின் மனதை கவரும் வகையில், இரட்டை இலையை போல் இருக்கும் சின்னத்தை தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டுள்ளார்.

இரட்டை விரலை காட்டும் வகையில் ஏதாவது சின்னத்தை தேர்ந்தெடுத்திருக்கலாமே, பன்னீர்செல்வம் கூட இருப்பவர்கள் எப்படி உஷாராக இரட்டை இலை போல் காட்சியளிக்கும் மின்கம்பத்தை தேர்வு செய்தனர். அந்த எச்சரிக்கை உணர்வு ஏன் இல்லை  கோபப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி தினகரன் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரமுகர்களிடமும் சிறையில் இருந்தபடியே தொலைபேசியில் பேசியுள்ளார்,

‘சின்னம் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் என்னிடம் ஆலோசனை கேட்க மாட்டீர்களா? நீங்களே முடிவு எடுத்துக் கொள்வீர்களா? நல்ல ஆலோசனை சொல்பவர்களை விட்டுவிட்டு ஜால்ரா கூட்டத்தை கூடவே வைத்து இருக்கிறீர்களா? தொப்பி சின்னத்தை காட்டி ஓட்டுக் கேட்டால். மக்களுக்கு குல்லா போட வருகிறார்கள் என்று மாற்றுக் கட்சிக் காரர்கள் கேலி பேச மாட்டார்களா?  பொறுப்பாக இல்லாவிட்டால் கட்சியை பன்னீர் மட்டுமல்ல தீபாவும் பங்கு போட்டுக் கொள்வார்கள்.

நீங்கள் வேடிக்கைதான் பார்க்க முடியும் ’ என்று திட்டி தீர்த்து உள்ளார். தினகரன் எப்போதும் சசிகலாவுக்கு பிடித்தமானவர் என்பதால் அவர் சொல்வதை சசி அணியினர் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் தலை ஆட்டுகின்றனர்.

அப்படி தலை ஆட்டிதான் இரட்டை இலையையும், சின்னம் தேர்வு செய்வதிலும் கோட்டை விட்டனர்.

ஆனால் சிறையில் இருந்தபடி சின்னம் விவகாரத்தில் தினகரன் மீது சசிகலா கொந்தளித்த விவகாரம் சசி அணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை