மார்ச் 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம் - தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் லாரி இயங்காது: மாநில நிர்வாகி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மார்ச் 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம்  தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் லாரி இயங்காது: மாநில நிர்வாகி தகவல்

மதுரை- தென் மாநில லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் வரும் 30ம்தேதி காலை 6 மணி முதல் துவங்குகிறது. தமிழக அரசு டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

ஆர்டிஓ அலுவலகங்களில் அனைத்து வேலைகளுக்கும் கூட்டப்பட்டுள்ள கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் 51 சுங்கச்சாவடிகள் உள்ளன.

இதில், காலம் முடிந்த சுங்கச்சாவடிகள் பல உள்ளன. இவைகளை நீக்கிட மத்திய அரசு முயல வேண்டும்.

15 வருடங்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களை தகுதி நீக்கிட உத்தரவு விதித்துள்ளனர். இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.

கனரக வாகனங்களில் பழைய வாகனங்களுக்கு ஸ்பீடு கவர்னர் கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.

தமிழகத்தை சேர்ந்த 4 லட்சத்து 25 ஆயிரம் லாரிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 30 லட்சம் லாரிகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தமிழ்நாடு துணைத்தலைவர் சி. சாத்தையா கூறியதாவது: இந்த வேலைநிறுத்தத்தால், தமிழகத்தில் மட்டும் தினமும் ரூ. ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பொருட்கள் முடங்கும். பால், மருந்து, சமையல் காஸ், குடிநீர் போன்றவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள், பழுதுநீக்கும் பட்டறை வைத்திருப்போர் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஊழியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர். மதுரையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் லாரிகள் உள்ளன.

தென் மாவட்டங்களில்  20 ஆயிரம் லாரிகள் இயங்காது.

.

மூலக்கதை