ஈழப்போரில் மனித உரிமை மீறல் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க இலங்கைக்கு மேலும் 2 ஆண்டு அவகாசம் - ஐநா மனித உரிமை ஆணையம் அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஈழப்போரில் மனித உரிமை மீறல் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க இலங்கைக்கு மேலும் 2 ஆண்டு அவகாசம்  ஐநா மனித உரிமை ஆணையம் அனுமதி

ஜெனீவா- ஈழப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கைக்கு எதிரான போர்குற்றம் குறித்து அந்நாடு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐநா மனித உரிமைகள் ஆணையம் மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற உச்ச கட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், போர்க் குற்றங்கள் அரங்கேறியதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இலங்கை ராணுவத்தினர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்ததாக ஐ. நா. அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

போர்குற்றம் தொடர்பாக விசாரிக்கவும், தமிழர்கள் மீண்டும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தியது.

ஆனால் இந்த விவகாரத்தில் இலங்கை தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வருவதாக ஐநா கடந்த மாதம் கண்டனம் தெரிவித்திருந்தது.

சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் குறித்த விசாரணை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு மேலும் 2 ஆண்டு காலம் அவகாசம் அளிப்பது தொடர்பான தீர்மானத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 36க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தன.

இலங்கைக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என உலகத் தமிழர்களும், தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, இந்தியா மவுனம் காத்து எதிராக வாக்களிக்காமல்,  இலங்கைக்கு சாதகமாக இருந்து கொண்டது.

இதனால் வாக்கெடுப்பு நடத்த தேவையில்லாமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இலங்கைக்கு போர் குற்றம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு இது தொடர்பாக 18 மாத கால அவகாசம் இலங்கைக்கு அளிக்கப்பட்டது.

தற்போது மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை