திருமண இணைய தளங்களில் ஆதார் இணைப்பதால் நம்பகத்தன்மை அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருமண இணைய தளங்களில் ஆதார் இணைப்பதால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்  ஆய்வில் தகவல்

புதுடெல்லி- திருமண வைபவங்களுக்கான இணையதளங்களில்  சுயவிவரங்களுடன் ஆதார் இணைக்கப்படும்போது வாடிக்கையாளர்களிடையே  நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த வாரம் தனியார் திருமண இணையதளம் ஒன்று, வரன்களின் சுயவிவரப் பட்டியலுடன் ஆதார் இணைப்பது குறித்து ஆய்வு நடத்தியது.

இதற்கென தனது இணையதளத்தை அதிகம் பயன்படுத்தும் 2000 வாடிக்கையாளர்களை தேர்வு செய்து, அவர்களிடம் ஆதார் மூலம் வரன்கள் பற்றிய விவரங்கள் சரிபார்ப்பதன் பயன்களை எடுத்துரைத்தது. பின் தேர்வு செய்தவர்களிடையே இதுகுறித்து சர்வே நடத்தியது.

ஆய்வு முடிவில், வரன்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ஆதாரை பயன்படுத்தலாம் என்று 74% பேர் ஆதரவு அளித்திருந்தனர். அதே நேரத்தில் திருமண இணையதளங்களில் பெரும்பாலானவர்கள் போலியான தகவல்களைஅளித்துள்ளதாக நம்புவதாக 80 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர்.



குறிப்பாக சிலர் தங்களை பிரபலப்படுத்திக்கொள்வதற்கு என்றே தினமும் ஒரு தகவலை இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 14 சதவீதம் பேர், இணையதளம் மூலம் தான் தங்களது துணையை தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வு முடிவில் இணையதளம் மூலம் வரன்களை தேர்வு செய்பவர்களில் 32% பேர் எதிர்பாலரின் முதிர்ச்சி மற்றும் மனபொருத்தத்தை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும், 20% பேர் கல்வியையும், 18% பேர் சுயதொழில் லாபம், 17% அழகு மற்றும் தோற்றத்துக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், 13% பேர் குடும்ப பின்னணியை நோக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

.

மூலக்கதை