4வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை வெல்ல கடும் போட்டி

தினகரன்  தினகரன்

தர்மசாலா: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தி அதிர்ச்சி அளித்தது. அடுத்து பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்டில் கடுமையாகப் போராடிய இந்தியா 75 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்டில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில் ஷான் மார்ஷ் - ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி 5வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி போட்டியை டிரா செய்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் தர்மசாலா, இமாச்சல் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே பார்டர் - கவாஸ்கர் டிராபியை தன் வசம் வைத்திருப்பதால், டிரா செய்தால் கூட கோப்பையை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தோள்பட்டையில் காயம் அடைந்துள்ள கேப்டன் கோஹ்லி, இப்போட்டியில் களமிறங்குவது உறுதி செய்யப்படவில்லை. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால், இப்போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை