வீடு திரும்பினார் முபாரக்

தினமலர்  தினமலர்
வீடு திரும்பினார் முபாரக்

கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபரான ஹோசினி முபாரக், 88, ஆறு ஆண்டுகளுக்குப்பின் நேற்று வீடு திரும்பினார். எகிப்து அதிபராக 1981 முதல் 2011 வரை 30 ஆண்டுகள் பதவியில் இருந்தவர் ஹோசினி முபாரக். 2011ல் 'அரேபிய வசந்தம்' என்ற பெயரில் லிபியா, எகிப்து போன்ற அரபு நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. முபாரக் ஆட்சியை எதிர்த்தும் மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆட்சியில் இருந்து இவர் துாக்கி எறியப்பட்டார். இதைத்தொடர்ந்து இவருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட நுாற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின் உடல்நலக் குறைவால் வீட்டுக்காவலில், கடந்தாண்டு முதல், மாடி ராணுவ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு முறையாக விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கின் மீது மறுவிசாரணை நடத்த வேண்டும் என முபாரக் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து மார்ச் 2ல், அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 6 ஆண்டு சிறைவாசத்துக்குப்பின், மாடி ராணுவ மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.

மூலக்கதை